2024ல் இந்திய சினிமா பிரபலங்களில் பலர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றிய தொகுப்பு இதோ...
நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி, பிப்ரவரி 21ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார்கள்.
தமிழ் படமான `ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக் `Cuttputlli' படத்தை தயாரித்தது ஜாக்கிதான். அதில் ஹீரோயின் ரகுல். அப்போது ஏற்பட்ட நட்பு காதலாகி கல்யாணத்தில் முடிந்தது. ரகுல் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஜாக்கியும் ஒரு தமிழ் படம் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? த்ரிஷா நடித்த மோகினி படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியா நடித்திருந்தார் ஜாக்கி.
க்ரித்தி கர்பந்தா - புல்கித் சாம்ராட் திருமணம் மார்ச் 15ம் தேதி ஹரியானாவில் நடந்தது.
Veerey Ki Wedding படத்தில் நடித்த மூலமா க்ரித்தி - புல்கித் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாகிறது. ஐந்து வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர்களின் காதல், திருமணமாக மாறியது. புல்கித் முழுக்க முழுக்க இந்தி படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார், ஆனாலும் க்ரித்தி ஒரு தமிழ் படம் நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடித்த `புரூஸ் லீ' படத்தில் இவர்தான் ஹீரோயின்.
டாப்ஸி - மேத்தய்ஸ் திருமணம் உதய்ப்பூரில் மார்ச் 23ம் தேதி நடைபெற்றது.
பேட்மிட்டன் வீரரான மேத்தய்ஸ் உடன் 1 வருட நட்பு, 10 வருட காதல் எனப் பயணித்திருக்கிறார் டாப்ஸி. சொல்லப்போனால் டாப்ஸி திருமணம் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டப்படி நடந்து முடிந்தது. பின்பு நண்பர்களையும் குடும்பத்தினரையும் மட்டும் அழைத்து சம்பிரதாயமாக ஒரு திருமணத்தை முடித்திருக்கிறார்.
பல வருடங்களாக ஒலித்த கேள்விகளில் ஒன்று பிரேம் ஜிக்கு கல்யாணம் எப்போ? என்பது. அவர் மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினர், வெங்கட்பிரபு, கங்கை அமரன், யுவன் எனப் பலரும் இதற்கு பதில் சொல்லி அலுத்து போனார்கள். இந்தக் கேள்விக்கு 2024ல் விடை கிடைத்தது. ஜூன் 9ம் தேதி பிரேம் ஜி - இந்து திருமணம் திருத்தணியில் நடைபெற்றது.
மூன்று வருட நட்பு காதலாகி, இந்து ப்ரப்போஸ் செய்ய, பின் குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணம் நிகழ்ந்திருக்கிறது.
ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் ஜூன் 10ம் தேதி சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது.
ஒரு வருடமாக ஐஸ்வர்யா - உமாபதி நட்பில் இருந்து பின் காதலாக மாறி, இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. மேலும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனாக்ஷி சின்ஹா - ஸாஹீர் இக்பால் திருமணம் ஜூன் 23ம் தேதி, மும்பையில் உள்ள சோனாக்ஷி வீட்டிலேயே நடைபெற்றது.
நடிகரான ஸாஹீர் இக்பால் - சோனாக்ஷி, 2017 முதல் காதலித்து வந்தானர். இருவரும் இணைந்து `டபுள் எக்ஸ்' என்ற படத்தில் நடித்தனர். மிக நெருங்கிய நபர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்ட சூழலில், திருமணத்திற்கு முன் ஜூன் 20ம் தேதி ஹவுஸ் பார்ட்டியும், ஜூன் 21ம் தேதி மெஹெந்தி பார்ட்டியும் கொடுத்து நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள் இந்த தம்பதி.
வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் ஜூலை 2ம் தேதி தாய்லந்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட்டில் மிக நெருங்கிய சுற்றமும் நட்பும் சூழ நடந்தது.
திருமணத்திற்கு மிக குறைவான நபர்களே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததால் ஜூன் 30ம் தேதி ஒரு தனியார் விடுதியில் மெஹந்தி பங்க்ஷன் நடந்தது. அதில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் அப்படி போடு பாடலுக்கு ஆடிய வீடியோவும் பெரிய வைரல்.
மும்பையை சேர்ந்த நிக்கோலாய் ஒரு art gallerist. 2010ல் இருந்து நல்ல நண்பர்களாக இருந்த வரலட்சுமி - நிக்கோலாய் உறவு, மெல்ல மெல்ல வளர்ந்து காதலாகி திருமணம் நடந்திருக்கிறது.
டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி - வர்ஷினி திருமணம் ஈரோட்டில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்றது. வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணமான இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றது. மேகா - விஷ்ணு இடையேயான பல வருட நட்பு, ஆறு வருட காதல், திருமணத்தில் சேர்ந்திருக்கிறது.
சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம் செப்டம்பர் 16ம் தேதி தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகசுவாமி கோவிலில் நடைபெற்றது.
`மகா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்த சித்தார்த் - அதிதி, அதன் பின் சில வருடங்களாக டேட்டிங்கில் இருந்தனர். நெருங்கிய வட்டம் சூழ சின்னதாக ஒரு திருமணம் முடித்த பின், பிரம்மாண்டமாக நட்பு வட்டம் சூழ ராஜஸ்தானில் ஒருமுறை என இருமுறை திருமண நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
நடிகை ரம்யா பாண்டியன் - லொவெல் தவான் திருமணம் நவம்பர் 8ம் தேதி ரிஷிகேஷில் நடைபெற்றது.
பெங்களூரை சேர்ந்த யோகா பயிற்சியாளர் லொவெல் தவான்/ கடந்த ஆண்டு யோகா டிரெய்னிங் சென்டர் ஒன்றில் சந்தித்துக் கொண்ட ரம்யா பாண்டியன் - லொவெல் தவான் நட்பு காதலாகி, விட்டார் சம்மதத்துடன் திருமணமாகியிருக்கிறது.
தனுஷ் இயக்கும் `இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 25வது படம் போன்றவற்றை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் - தாரணி திருமணம் சென்னையில் நவம்பர் 21ம் தேதி நடைபெற்றது.
சினிமாவில் பலருடன் ஆகாஷ் நட்பில் இருப்பதால், ஆல்மோஸ்ட் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் இந்த திருமணத்தில் குவிந்தனர்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நாக சைதன்யா இன்ஸ்டாவில் தனது உணவகத்தைப் பற்றி பதிவிட, அதை பற்றி பேச உடையாடலை துவங்கி இருக்கிறார் ஷோபிதா. அந்த உடையாடல் நட்பாகி, பின்பு ஹைதராபாத் டூ மும்பைக்கு பறந்து பறந்து காதல் வளர்த்திருக்கிறார் சைதன்யா.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர் திருமணம் டிசம்பர் 8ம் தேதி, குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.
தாரிணி புகழ்பெற்ற மாடல், 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர். 2021 மிஸ் யுனிவர்ஸில் ரன்னர் அப் பெற்றவர். 2019 முதல் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்பு அது காதலானது. சென்ற ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனதும் வெளிப்படையாக தங்கள் உறவை அறிவித்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது.
சிறு வயதிலிருந்து நண்பர்களாக, பல ஆண்டுகள் காதலர்களாக பயணித்தவர்கள் உறவு திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. இந்து முறைப்படி நடந்த திருமணம் போல, கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டனர்.