“அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” - கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்புக்கு கமல் பதில்!
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு சூறாவளியாக சுற்றி சுழன்று வருகிறது. இந்த சுறாவளி பயணத்தின் போது புயலாய் ஒரு பிரச்னை கமல்ஹாசனை சூழ்ந்துள்ளது. ஆம், சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்றிருந்தார். அவரை குறிப்பிட்டு பேசும், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்' என்று பேசினார் கமல்ஹாசன்.
இதையடுத்து கமல் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராகி வரும் நிலையில், கர்நாடக அமைப்பினர் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கன்னட மொழிக்கு தனி வரலாறு இருக்கிறது; தமிழ் மொழியில் இருந்து பிறக்கவில்லை; கமல் பேச்சு தவறானது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் புரமோஷன் நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்தது. அப்பொழுது, இந்த சர்ச்சை குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், “அவர்கள் நான் சொன்னதை குழப்பிக் கொண்டார்கள். மிகுந்த அன்போடு, வரலாற்று ஆய்வாளர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த வரலாற்றையே நான் சொன்னேன்.
தமிழ்நாடு அனைவருக்குமானது. மேனனும், ரெட்டியும், கன்னட ஐயங்காரும் பலரும் எங்களுக்கு முதல்வராக இருந்திருக்கிறார்கள். இது பிற மாநிலங்களிலும் இருக்கலாம், நான் இல்லையென சொல்லவில்லை. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோதுகூட, ‘எங்கும் செல்லாதீர்கள், இங்கே வாருங்கள்’ என்று கன்னடர்கள் என்னிடம் சொன்னார்கள்.
மக்கள் தக் லைஃப்பையும், இந்த பிரச்னையையும் பார்த்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள்; அவர்களுக்கு இதுபற்றி போதிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும்.
எனவே இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். வடக்கிலிருந்து அவர்கள் பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தென் குமரியிலிருந்து பார்த்தால், நான் சொல்வதே சரி.
இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். அதை வல்லுநர்களே சொல்ல வேண்டும். குடும்பத்தோடு இருக்கும் முடிவை எடுக்க வேண்டுமா, அல்லது வடக்கிலிருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா என்பதை அவர்கள் சொல்லட்டும்.
இது பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” என்றார்.