"100 நாட்களுக்குப் பிறகே படங்கள் OTTல் ரிலீஸ்!" - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் | Theatre
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா துறையின் நலனுக்காக 100 நாட்களுக்கு பிறகே படங்களை OTT தளங்களில் வெளியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் படங்கள் அதிகமாக வெளியிடப்பட்டு, திரையரங்க வருமானம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் சம்பளத்தை குறைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் சுப்ரமணியன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓடிடியினால் சினிமா பாதிப்படைந்திருப்பது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேசிய போது, "ஓடிடி தளங்கள் உள்ளே வந்த பிறகு தான் சினிமா துறை அழிய ஆரம்பித்தது. அவர்கள் வந்த புதிதில் ஏராளமாக விலை கொடுத்தார்கள். அந்த விலையை மையப்படுத்தி தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை அதிகப்படுத்தினார்கள். தற்போது கடந்த மூன்று மாதங்களாக எந்த ஓடிடி தளங்களும், எந்த படங்களையும் வாங்குவது கிடையாது. தயாரிப்பாளர்களோ ஓடிடியில் படம் விற்கும் என நினைத்து, படத்திற்கு செலவு செய்துவிட்டார்கள். இப்போது சொல்லி வைத்தது போல எல்லா ஓடிடி தளங்களும் படம் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ஓடிடியை மனதில் வைத்து செலவு செய்து எடுக்கப்பட்ட படங்களின் காப்பி ரெடி, ஆனால் அவை தேங்கி நிற்கின்றன.
பட ரிலீஸை முடிவு செய்யும் OTT
கடந்த வாரம் வரவேண்டிய அகண்டா வெளியாகாமல் போக காரணமும் இந்த பண சிக்கல்தான். கோடிக்கணக்கில் பணம் வராமல் நிற்கிறது. அதன் விளைவாக படங்களை சொன்ன தேதிக்கு வெளியிட முடியவில்லை. தமிழ்நாட்டிலேயே பெரிய நடிகர்கள் நடித்த ஏறத்தாழ 10 படங்கள் காப்பி ரெடியாக உள்ளது. ஓடிடி, சேட்டிலைட் விலை பேச வராததால் வெறுமனே தியேட்டர் வருமானத்தை மையமாக வைத்து அவர்களால் படத்தை வெளியிட முடியவில்லை. ஓடிடியை நம்பி செலவு செய்துவிட்டதுதான் காரணம். செலவு என்றால் என்ன, ஒரு படம் 100 கோடி பட்ஜெட் என்றால் 80 கோடி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளமாக சென்றுவிடுகிறது. 20 கோடியில் படத்தை எடுக்கிறார்கள். ஓடிடியை மனதில் வைத்து 80 கோடியை கொடுத்து பழகிவிட்டனர் தயாரிப்பாளர்கள். அதனுடைய விளைவே சினிமா இப்போது தத்தளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக ஏதாவது பெரிய படம் வந்திருக்கிறதா? தீபாவளிக்கு கூட பெரிய நடிகர்களின் படம் வரவில்லை. ஏனென்றால் எல்லாம் ஓடிடி நிறுவனங்களில் கையில் இருக்கிறது. தீபாவளிக்கு என்ன படம் வர வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். உதாரணத்திற்கு பொங்கலுக்கு வெளியாக உள்ள படங்களே, தீபாவளிக்கு வந்திருக்க வேண்டிய படங்கள். ஓடிடி நிறுவனங்கள் எங்களுக்கு 2025ல் பட்ஜெட் இல்லை, 2026ல் தான் வாங்க முடியும் என சொன்னதால் தான், பெரிய நடிகர்கள் படம் கூட பொங்கலுக்கு சென்றிருக்கின்றன" என்றார்.
தவறு செய்தால் ஒத்துழைப்பு இல்லை!
திரையரங்கிற்கு வருவது பெரிய செலவு வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறதே, திரையரங்கில் உணவு வகைகளின் விலை குறைப்பு சாத்தியமா எனக் கேட்கப்பட "உணவுகளின் விலையை குறைப்பது பற்றி பேசி வருகிறோம். அது எல்லா திரையரங்குகளை செய்வதில்லை, சில கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் செய்கிறது. சில தவறுகளை ஏதோ சில திரையரங்க உரிமையாளர்கள் செய்யலாம், அவர்களை நாங்கள் கண்டிக்க தான் முடியும். பின்பு அவர் ஒரு பிரச்னை என வந்தால், நாங்கள் சொன்னதை நீ கேட்டாயா? எனவே நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று தான் எங்கள் நடவடிக்கை இருக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றனர்.
நடிகர்களின் சம்பளத்தை குறைக்க என்ன முயற்சி எடுப்பீர்கள் என்றபோது " நடிகர்களின் சம்பளத்தை குறைப்பது பற்றி தயாரிப்பாளர்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறோம். அவர்கள் ஒத்துழைத்தால் தான் நாம் பேச முடியும். நமக்கு சம்பந்தமில்லாத துறையில் சென்று மூக்கை நுழைக்க முடியாது. அது தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இப்போதுதான் இந்த அப்பிரச்சனை எழுந்திருக்கிறது. வருங்காலத்தில் அவர்கள் திருத்திக் கொள்ள பேச்சை துவங்கி இருக்கிறோம்" என்றனர்.
சிறிய படங்களுக்கு திரையரங்கு ஆதரவு கொடுப்பது பற்றி பேச்சு வந்த போது, "முதலில் பட வெளியீட்டை நெறிமுறைப்படுத்துங்கள். திரையரங்கு கிடைக்கவில்லை என சொல்லாதீர்கள். யாரும் படம் போட மாட்டோம் என சொல்லவில்லை. திரையரங்கு இருப்பதேபடம் போட தான். ஒரே நாளில் 8 - 10 படம் வரும் போது எப்படி எல்லா படத்தையும் போடுவது? இருப்பது 4 ஷோ தானே. இந்த வாரம் இந்தப் படங்கள், அடுத்த வாரம் இந்த படங்கள் என வரையறுக்க வேண்டியது தயாரிப்பாளர்கள் தானே" என்றனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் டிக்கெட் விலை குறைவு
டிக்கெட் விலை குறையுமா என்ற கேள்வி கேட்டதும் "இந்தியாவிலேயே தியேட்டர் டிக்கெட் குறைவான விலையில் விற்பது தமிழ்நாட்டில் தான். இன்னுமும் குறைக்க வேண்டும் என்றால் தியேட்டர் நடத்த வேண்டாமா? 150 டிக்கெட்டில் வரி போக எங்களுக்கு வருவது 114 ரூபாய் தான். அதைத்தான் படத்தின் விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளர்களும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்" என்றனர்.
டிக்கெட் முன்பதிவு தளங்களை அரசே எடுத்து நடத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி கேட்கப்பட்ட போது, "ஏற்கெனவே இதை ஆந்திராவில் முயற்சித்து பார்த்தனர். அதை செய்வது சாத்தியமல்ல. நாம் ஆன்லைனில் டிக்கெட் விற்கிறோம், அடுத்த நாள் காலையில் எங்களுக்கு பணம் வரவேண்டும். அரசாங்கமோ, வேறு ஏதாவது சங்கமோ எடுத்து நடத்தினால் அடுத்த நாள் காலையில் எங்களுக்கு பணம் வராது. எங்களுக்கு பணம் வந்தால் தான் நாங்கள் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க முடியும். மேலும் இது ஓடிடியில் உள்ள சிக்கல்கள் குறித்த கூட்டம், உங்களின் மற்ற கேள்விகளுக்கு பிறகு ஒரு சந்திப்பில் பேசலாம்" என்றனர்.
100 நாட்களுக்கு பிறகே OTT
இறுதியாக, "இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து டிசம்பர் வரை வந்த படங்கள் சுமாராக வசூல் செய்ததற்கு காரணமே ஓடிடி தளங்கள் தான். இதனை தயாரிப்பாளர்களும் ஒப்புக் கொள்வார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து 2026லிருந்து 100 நாட்கள் கழித்தே ஓடிடியில் படங்கள் என சாத்தியமாக்க வேண்டும். அது நடந்தால் கூட இந்த நிலை சீராக இன்னும் ஒரு வருடம் ஆகும். ஏனென்றால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்ட படங்களை எதுவும் செய்ய முடியாது. 2026ல் பூஜை போடும் படங்களில் இருந்து இதனை செயல்படுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறோம். பூஜை போடும் படங்கள் வரவே 6 மாதங்கள் ஆகிவிடும். 2026 இறுதி அல்லது 2027ல் இது சரியாகும்.
முன்பு ஹீரோக்களுக்கு அளித்த சம்பளத்தை இப்போது கொடுக்க வாய்ப்பில்லை என தயாரிப்பாளர்கள் கூறிவிட்டனர். ஓடிடி நிறுவனங்களும் தியேட்டரில் படத்தின் வசூலை மையப்படுத்தி விலை பேசுவோம் எனக் கூறிவிட்டார்கள். தியேட்டர் வசூலை வைத்துதான் இனி தயாரிப்பாளர்களுக்கு லாபம். இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும், மக்கள் மறுபடி திரையரங்கிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றனர்.

