“100 கோடி.. 150 கோடி.. சம்பளம் வாங்கி தயாரிப்பாளர்களை காலிசெய்துவிட்டனர்” - திருப்பூர் சுப்பிரணியம்
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர். திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணியின்றி வீட்டில் உள்ளனர். காரணம் அப்படி சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக இல்லை. இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் தான். 8 வாரம் கழித்து தான் ஓடிடி வெளியீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதன் பாதிப்பு இன்று தெரிகிறது. யாருடைய படமும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
நடிகர்கள் அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டும்..
நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால், பல தயாரிப்பு நிறுவனங்கள் கதை முடிந்து விட்டது. ஏ.வி.எம் போன்ற நிறுவனங்கள் இன்று சொந்த படம் எடுக்க விரும்புவதில்லை. தென்னிந்திய சினிமா அதளபாதாளத்தில் உள்ளது. இதனை சரி செய்ய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்படும். இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது. விகிதாச்சார அடிப்படையில் தான் ஊதியம் என்பதே எங்கள் முடிவு.
கமல், அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பி.வி.ஆர் குழுமம் கூட நஷ்டத்தில் தான் இயங்குகிறது. பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்ல படியாக வைத்துக் கொள்ளுங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறக்கும். சிறு படங்கள் எடுப்பவர்கள் கூட கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர். ஆனால் பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள்.
கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், கில்லி, சச்சின் போன்ற ஒரு சில படங்கள் தான் ரீ-ரிலீஸில் சாதித்தன. இப்போதைய நடவடிக்கை மூலம் கூடுதல்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள் என தெரிவித்தார்.

