2025 Important Cinema Events
2025 Important Cinema Events2025 Rewind

2025 Cinema Recap | COPYRIGHT, ரீ ரிலீஸ், POSTPONED, சாய் அப்யங்கர்.. 20 நிகழ்வுகள்..

2025 இந்திய சினிமாவில் நடந்தவை என்னென்ன? ஒரு ரீகேப்

1. POSTPONEDஐ துவக்கி வைத்த விடாமுயற்சி

Vidamuyarchi
Vidamuyarchi

2025ன் துவக்கமே ஒரு ஏமாற்றத்துடன் தான் ஆரம்பித்தது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான `விடாமுயற்சி' பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படம் தள்ளிப்போகிறது என New year's eve சமயத்தில் அறிவிப்பை வெளியிட்டது லைகா. வருஷம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படியா என அதிர்ச்சியுடன், 2025ஐ வரவேற்றது சினிமா உலகம். `விடாமுயற்சி'யில் துவங்கிய POSTPONED ராசி சமீபத்தில் வெளியாக இருந்த `வா வாத்தியார்' வரை டாமினோ எஃபெக்ட் போல பாதித்தது. ரசிகர்களுக்கு தான் இந்த தாமதமெல்லாம், ஆனால் அஜித் அடுத்தது குட் பேட் அக்லி ஹிட், பரபரப்பாக ரேஸ், குடும்பத்துடன் ஆன்மீகப்பயணம், பத்மபூஷன் விருது என இந்த வருடம் முழுக்க சிறப்பாகத் தான் அமைந்தது.

2. இளையராஜா மற்றும் Copyright

Ilayaraja
Ilayaraja

POSTPONED போல இந்த ஆண்டு கோலிவுட்டில் அடிக்கடி கேட்ட வார்த்தை Copyright மற்றும் இளையராஜா. `குட் பேட் அக்லி', `Mrs & Mr',`கூலி', `ட்யூட்' என தொடர்ச்சியாக பல படங்களில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி, அதில் காப்புரிமை சம்பந்தமான சிக்கல்களால் நீதிமன்ற வழக்குகள் நடந்து, பின்பு அதற்கான தொல்லையை அளிக்கப்பட்டு பிரச்னை முடிந்தது.

3. மாஸ் காட்டிய மத கஜ ராஜா

Madha Gaja Raja
Madha Gaja Raja

சில சமயங்களில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ற ஆச்சர்யம் சில சம்பவங்கள் நிஜமாகும் போது தோன்றும். அப்படி இந்த ஆண்டு பொங்கலுக்கு நடந்த ஒரு சம்பவம் தான் `மத கஜ ராஜா' ரிலீஸ். 2013ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படம் விஷால் நடித்து சுந்தர் சி இயக்கிய `மத கஜ ராஜா'. பல பணப் பிரச்னைகள் காரணமாக கிடப்பிலிருந்து இப்படம், இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வந்தது. 12 வருடங்கள் பழைய படம் என்பதை எல்லாம் தாண்டி, இந்த பொங்கலுக்கு வந்த படங்களை எல்லாம் ஓரம் கட்டி, பிளாக் பாஸ்டர் ஆனது. இந்த பட புரமோஷனின் போது விஷால் கை நடுக்கம் சார்ந்த வீடியோக்கள் வெளியானதும், பின்பு அதையே ஒரு யுக்தியாக அடுத்த சில நிகழ்வுகளில் விஷால் பயன்படுத்தியதும் இதில் போனஸ் தகவல்.

4. Rise of பிரதீப் ரங்கநாதன்

Pradeep Ranganathan
Pradeep Ranganathan

ஒரு நாயகன் உதயமாகிறான் என இந்த ஆண்டின் ஸ்டார் ஆகி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். `டிராகன்', `டியூட்' என அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் மாபெரும் ஹிட். LIK தள்ளிப் போகாமல் இருந்திருந்தால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் ஹிட் அடித்திருப்பார் PR. ஜஸ்ட் மிஸ்!

5. `லேடி சூப்பர்ஸ்டார்' வேண்டாம்

Nayanthara
Nayanthara

நயன்தாரா `லேடி சூப்பர்ஸ்டார்' பட்டம் தனக்கு வேண்டாம், அதனை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஆண்டு கமல்ஹாசன் `உலகநாயகன்' பட்டம் வேண்டாம் என்றதும், 2021ல் அஜித் தன்னை `தல', `அல்டிமேட் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என சொன்னதும் குறிப்பிடத்தக்கது. 

2025 Important Cinema Events
Pan India Movieஐ துவங்கியதே சென்னைதான்! - கமல்ஹாசன் | Kamalhaasan | Vels | Ishari K. Ganesh

6. இளையராஜாவின் சிம்பொனி

ilayaraja symphony london
ilayaraja symphony london

இளையராஜா மீண்டும் தன் மேதமையை உலகத்திற்கு காட்டியது இந்த ஆண்டு. ஒருபக்கம் காப்புரிமை பற்றிய புரிதல்கள் இல்லாதவர்களின் கிண்டல், இன்னொரு பக்கம் மகள் பவதாரணியின் இழப்பு. இரண்டையும் கடந்து வந்து தன்னுடைய முதல் சிம்பொனி `Valiant'ஐ லண்டனில் அரங்கேற்றினார். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு இளையராஜாவுக்கு பாராட்டுவிழா எடுத்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாப்களின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். போலவே ரஜினிகாந்தும் 50 ஆண்டு திரைப்பயணத்தை கடந்திருப்பதும், அவருக்கு கோவாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதும் கூட இந்தாண்டு கவனம் கூற வேண்டிய நிகழ்வுகளே.

7. அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீ

Sree
Sree

`ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', `மாநகரம்' படங்கள் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீ, தன்னுடைய இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்ட பதிவுகள் பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. மனரீதியாக அவருக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவை என பலரும் பதிவிட்டனர். திரைத்துறையில் உள்ள லோகேஷ் போன்ற நண்பர்கள் அவருக்கான உதவி கிடைக்குமாறு பார்த்துக் கொண்டு ஸ்ரீயை மீட்டனர். இப்போது ஸ்ரீ தனது புத்தக வெளியீட்டுக்கான வேலைகளில் இருக்கிறார்.

8. கைவிட்ட பிரம்மாண்ட படங்கள்

Small Budget Films
Small Budget Films

ஒருபுறம் PAN இந்தியா பிரம்மாண்ட படங்கள் என சினிமா நகர, இந்திய அளவில் பல படங்கள் அடிவாங்கியது. தமிழ் பொறுத்தவரை, மணிரத்னத்தின் `தக் லைஃப்', ரஜினிகாந்தின் `கூலி', சூர்யாவின் `ரெட்ரோ' என பெரியதும் எதிர்பார்க்கப்பட்ட பல பெரிய படங்கள் தோல்வியடைந்தன. ஆனால் `டூரிஸ்ட் ஃபேமிலி', `குடும்பஸ்தன்', `ஆண்பாவம் பொல்லாதது' என சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களை வாழ வைத்தன. இதனை மையமாக வைத்து இனிமேல் ஓடிடி வருமானத்தை மையமாக வைத்து படம் எடுப்பதை நிறுத்த வேண்டும், தியேட்டருக்கு படம் எடுக்க வேண்டும், அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். 

9. அதிர்ச்சி தந்த வழக்கு

Srikanth
Srikanth

இதனிடையே வந்த திரையுலகத்தையே அதிர வைத்தது ஒரு போதை பஞ்சாயத்து. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கொக்கைன் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விசாரிக்கப்பட்டனர். ஜுலை 8ம் தேதி இந்த வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டு வெளியே வந்தார் ஸ்ரீகாந்த். 

10. துவங்கிய பிரம்மாண்டங்கள்

Mega Films
Mega Films

இந்த ஆண்டு இந்திய அளவில் மூன்று மிகப்பெரிய படங்கள் துவங்கியுள்ளன. ஒன்று அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படம், நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் `ராமாயணா', ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் `வாரணாசி'. இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.

2025 Important Cinema Events
"100 நாட்களுக்குப் பிறகே படங்கள் OTTல் ரிலீஸ்!" - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் | Theatre

11. விஷால் - சாய் தன்ஷிகா

Vishal, Sai Dhanshika
Vishal, Sai Dhanshika

நெடுகாலமாக பேச்சுலராக இருந்த விஷால் - சாய் தன்ஷிகாவை கரம்பிடிக்கப் போவதாக `யோகிடா' பட நிகழ்வில் அறிவித்தார். மேலும் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 27ம் தேதி விஷால் - சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 2026ல் திருமணம் ஆக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

12. சினிமாவில் இன்பன் உதயநிதி

Inban Udhayanithi
Inban Udhayanithi

ரெட்ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் உதயநிதியின் வாரிசு இன்பன் உதயநிதி `இட்லிக்கடை' படத்தை வெளியிட்டதன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். விரைவில் நடிகராகவும் அறிமுகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

13. சாதித்த சாய் அப்யங்கர்

Sai Abhyankkar
Sai Abhyankkar

இந்தாண்டு சினிமா உலகில் அதிகம் பேசப்பட்ட ஒரு நபர் சாய் அப்யங்கர். அதிகம் முணுமுணுக்கப்பட்ட பாடல்களும் அவருடையது தான். `கட்சி சேர', `ஆச கூட' என இன்டிபென்டன்ட் பாடல்கள் மூலம் இளசுகளை கவர்ந்தவர், `பென்ஸ்', `கருப்பு', `ட்யூட்', `மார்ஷல்', அல்லுஅர்ஜூன் படம் என அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆனார். `ட்யூட்' பட பாடல்கள் இந்த ஆண்டின் பெரிய ட்ரெண்ட். சிலர் ட்ரோல் செய்தாலும் ஊரும் ப்ளட், பாயும் ப்ளட் ஆக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததை மறுக்கவே முடியாது.

14. வெற்றிமாறன் - சிம்பு

Arasan
Arasan

நம்பவே முடியாத நிகழ்வில் இன்னொன்றும் இந்த ஆண்டு நடந்தது. வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி `அரசன்' படத்தில் இணைந்ததும், படத்தின் படப்பிடிப்பு துவங்கியும் இருப்பது கோலிவுட்டுக்கான ரியாலிட்டி செக்.

15. கலக்கிய காந்தாரா சாப்டர் 1

Kantara Chapter 1
Kantara Chapter 1

`காந்தாரா' படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட்டானதால், அதன் முன் கதையாக உருவான `காந்தாரா சாப்டர் 1' படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. விமர்சன ரீதியாக கலவையான ரியாக்ஷன் இருந்தாலும், கலெக்ஷனாக அதிகம் வசூல் செய்த இந்திய படமாக மாறியது, `காந்தாரா சாப்டர் 1'. உலகம் முழுக்க கிட்டத்தட்ட 900 கோடி வசூல் என சொல்லப்படுகிறது.

16. ஆமீர்கானின் தைரியமான முடிவு

மூன்றாண்டு இடைவெளிக்கு பிறகு அமீர்கான் நடிப்பில் வெளியான படம் `Sitaare Zameen Par'. இந்தப் படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும், ஓடிடியில் வராது என அமீர்கான் எடுத்த முடிவும் இந்தாண்டு சினிமாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு முடிவு. பட வெளியீட்டுக்கு சில மாதங்களுக்கு பிறகு யூட்யூபில் Pay Per View முறையில் படத்தை வெளியிட்டார். அதே நேரம் கூலியில் `எப்படி இருக்கீங்க அண்ணா' என்று வந்தவரை ட்ரோல் செய்து தள்ளியது இணைய சமூகம் என்பது குறிப்பிட வேண்டியது.

17. ரீ ரிலீஸ் வருடம்

Re Release
Re Release

விஜய் நடித்த `கில்லி' கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது. எனவே இதேபோல் ஹிட்டாக வேண்டும் என இந்த ஆண்டு வரிந்துகட்டி பல படங்கள் ரீ ரிலீஸ் ஆனது. `சச்சின்', `குஷி', `ஃப்ரெண்ட்ஸ்', `ஆட்டோகிராஃப்', `நாயகன்', `அஞ்சான்', `பாகுபலி', படையப்பா என பல படங்கள் மீண்டும் வெள்ளித்திரை நோக்கி வந்தன. சச்சின், படையப்பா தவிர மற்ற படம் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. 

18. ஒரே வாரத்தில் மாறிய `தலைவர் 173'

Thalaivar 173
Thalaivar 173

ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர நடந்த நிகழ்வு `தலைவர் 173'. ரஜினிகாந்த் நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என அறிவித்தனர். அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில் அப்படத்திலிருந்து விலகுவதாக அறிக்கையை வெளியிட்டார் சுந்தர் சி. கோலிவுட் வட்டாரத்தில் இந்த நிகழ்வு பெரிய பேசு பொருளானது.

19. காலமான கலைஞர்கள்

Legendary Artists
Legendary Artists

இந்தாண்டு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவ், சரோஜா தேவி, மனோஜ் குமார், ரோபோ ஷங்கர், வி சேகர், தர்மேந்திரா, AVM சரவணன் உட்பட சில முக்கிய நபர்களை இழந்தது இந்திய சினிமாத்துறை.

20. திருமணமான ஜோடிகள்

Samantha
Samantha

பிரபலங்களின் திருமணங்களில் பாடகர் அர்மான் மாலிக் - ஆஷ்னா, இயக்குநர் அஜய் ஞானமுத்து - ஷிமோனா, நடிகை அபிநயா - கார்த்திக், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் -அகிலா எனப் பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதில் ஸ்பெஷல் மிக எளிமையாக குடும்பத்தினர் நண்பர்களை மட்டும் அழைத்து நடந்த சமந்தா - ராஜ் திருமணம் தான். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com