Jailer 2 | ‘முதல் பாகத்தை விட சிறப்பாக வந்துள்ளது..’ ரஜினி நடிப்பு குறித்து சுராஜ் நெகிழ்ச்சி!
மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ரஜினிகாந்துடன் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ரஜினி சார் ஒரு மெஜீஷியன் போல ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்படுத்துவார் என்று கூறிய அவர், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தவர், சில படங்களில் முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் நடித்த `வீர தீர சூரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்போது அவர் நடிப்பில் இரண்டாவது தமிழ் படமாக கென் கருணாஸ் இயக்கியுள்ள `யூத்' படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரமோஷனுக்கு அளித்த பேட்டியில் சுராஜ் பேசிய போது "எனக்கு தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும், நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என ஆசை. இப்போது தான் அதை நோக்கி சரியான பாதையில் செல்வதாக நினைக்கிறேன். தனுஷ் சாருடன் நடிக்க ஆசை இருந்தது, அது `கர' படம் மூலம் நடந்ததில் மகிழ்ச்சி. தனுஷ் சார் ஒரு ஸ்டார் பார்ஃபாமர். ஏனென்றால் அவர் கமர்ஷியல் படம் செய்யும் போதும் கூடவே `மரியான்', `அசுரன்' போன்ற படங்களில் நடிப்பார். இப்போது ஹாலிவுட் படம் வரை நடிக்கிறார்." என்றார்.
கூடவே ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை சொன்னவர் "`ஜெயிலர் 2' படம் சூப்பராக வந்திருக்கிறது. முதல் பாகத்தைவிட இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. ரஜினி சாரை பார்த்தால் போதும் என்று இருந்தவன் நான். அவரோடு நடிப்பேனா, இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன். ரஜினி சார் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பினால் நம்மை ஆச்சர்யப்படுத்துவார். அந்த மாதிரி ஒரு மெஜீஷியன் தான் ரஜினி சார்." என்றார்.

