பேசும் படம் முதல், பாடும் படம் வரை... சினிமாவில் சிங்கீதம் சீனிவாச ராவ் பங்களிப்பு!
இந்திய சினிமாவின் முன்னோடியாக விளங்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், 94 வயதில் காலமானார். பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய அவர், ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காம ராஜன்’ போன்ற படங்களால் தனித்துவமான அடையாளம் பெற்றார். அவரது பங்களிப்பு சினிமா உலகில் மறக்க முடியாதது.
இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் (94) வயது மூப்பால் காலமாகி இருக்கிறார். ஆந்திராவில் பிறந்த அவரது சினிமா பயணமும், சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பும் மிகப்பெரியது. சிங்கீதத்தின் சினிமா பயணம் பழம்பெரும் இயக்குநர் கே.வி. ரெட்டியிடம் துவங்கியது. அவர் இயக்கிய `மாயா பஜார்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
1972ல் Neeti Nijayiti படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். `திக்கற்ற பார்வதி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து உருவாக்கிய `ராஜ பார்வை', அபூர்வ சகோதரர்கள்', `காதலா காதலா' திரைப்படங்கள் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. சினிமா டாக்கீஸ் ஆக மாறிய பின்னர், வசனமே இல்லாமல் ஒரு படம் எடுத்தார் சிங்கீதம். அதுதான் `புஷ்பக்', தமிழில் `பேசும் படம்'. ‘அபூர்வ சகோதரர்கள்’ வழக்கமான இரட்டையர் கதையை முற்றிலும் வேறுபடுத்தி, ஒரே நடிகர் இரண்டு சகோதரர்களில் ஒருவரை dwarf கதாபாத்திரமாக நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் கமல் எப்படி குள்ளமான ஒருவராக நடித்தார் என்பது இன்னும் ஒரு மர்மம் தான்.
‘மைக்கேல் மதன காம ராஜன்’ ஒரே நடிகர் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் quadruplets conceptல் படம் இயக்கி இருந்தார். அதிலும் கிராஃபிக்ஸ் போன்ற தொழிநுட்பங்கள் இல்லாத ஒரு காலத்தில், நான்கு கதாபாத்திரங்களை ஒரே frame-ல் காட்டும் தொழில்நுட்ப முயற்சிகள் split-screen, compositing போன்ற முறைகளை திறமையாகப் பயன்படுத்தினார். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் இன்றும் பிரமிப்பு தரக்கூடியது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய ‘ஆதித்யா 369’ தான் இந்திய சினிமாவில் முதல் time-travel படம். இன்றளவும் அந்தப் படத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழில் ‘லிட்டில் ஜான்’ போன்ற வித்தியாசமான் ஃபேன்டசி படத்தை கொடுத்து பெரிய வரவேற்பை பெற்றார்.
சிங்கீதம் எப்போதுமே தனது வயதை ஒரு பொருட்டாக நினைக்காதவர். தனது 80களிலும் animation technology கற்றுக்கொண்டு ‘Son of Aladdin’ என்ற படத்தை உருவாக்கினார்.
சினிமாவில் அவருக்கு இருந்த காதலை புரிய வைக்க இன்னொரு சம்பவம் இது. இவர் சமீபத்தில் இயக்கிய படம் ‘Sing Geetham’, இந்தப் படம் ஜூன் 12ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் இருந்த சவால் என்ன என்றால், இந்த முழுப் படமும் பாடல் தான். அதாவது படம் துவங்கி சில நிமிடங்களில் படத்தின் அனைத்து பாத்திரங்களும் வசனத்துக்கு பதில் பாடல் தான் பாடுவார்கள். கூடுதல் தகவல் என்ன என்றால் நடிகர்களே தங்கள் கதாபாத்திரங்களுக்கான பாடல்களைப் பாடி இருந்தனர். இந்தப் படத்தை இயக்கிய போது சிங்கீதம் வயது 94. தனது கடைசி தருணம் வரை சினிமாவை பற்றி மட்டுமே சிந்தித்த ஒரு இயக்குநரை தான் இந்திய சினிமா இப்போது இழந்திருக்கிறது.

