என் பெயரை பயன்படுத்தி மோசடி? - நடிகை ஸ்ரேயாவின் எச்சரிக்கை! | Shriya Saran
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் தனது பெயரில் ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் ஆள்மாறாட்டம் செய்வது பிறரை தொடர்புகொள்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார், மேலும் திரையுலகைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம், கவனமாக இருங்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதைப் பற்றி அந்த வாட்ஸ் ஆப் கணக்கின் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்ட ஸ்ரேயா "இந்த முட்டாள் யாராக இருந்தாலும், தயவுசெய்து இப்படி மக்களை தொடர்பு கொள்வதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள். துரதிர்ஷ்டவசமாக இது விசித்திரமானது. மக்களின் நேரம் வீணடிக்கப்படுவது பற்றி நான் வருத்தப்படுகிறேன். இது நான் அல்ல, எனது எண் அல்ல.
இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த மோசமான நபர் தொடர்புகொள்ளும் அனைவரும், நான் போற்றும் மற்றும் வேலை செய்ய விரும்பும் நபர்கள். இது மிகவும் விசித்திரமானது. இதைச் செய்து நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? வேறொருவரின் அடையாளத்தை பயன்படுத்துவதை விடுத்து, உங்களுக்கு என ஒரு வாழ்க்கையைத் தொடங்குங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னதாக, நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் இதேபோல் தனது வாட்ஸ்அப் ஆள்மாறாட்டம் குறித்து ரசிகர்களை எச்சரித்திருந்தார். "யாரோ வாட்ஸ் ஆப்பில் என்னை போல, பிற போட்டோகிராபர்களிடம், போட்டோ ஷூட்ஸ் குறித்து பேசி வருகின்றனர். அது நான் இல்லை. நான் அப்படி யாரிடமும் பேச மாட்டேன். நான் எனது பெர்சனல் மொபைல் நம்பரை, வேலைக்காக உபயோகிக்க மாட்டேன். கவனமாக இருங்கள், யாரும் இதற்கு ரிப்ளை செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் எனது குழுவை வைத்துதான் கையாள்வேன். இப்படி உங்களுக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், எனக்கு தெரியப்படுத்துங்கள்" என்று அதிதி தனது சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டார்.
ஸ்ரேயாவின் திரைப்பட பணிகள் பொறுத்தவரை, கடைசியாக தேஜா சஜ்ஜாவின் `மிராய்' படத்தில் நடித்தார். தமிழில், நடிகர் மெட்ரோ ஷிரிஷின் வரவிருக்கும் `நான் வயலன்ஸ்' படத்தில் 'கனகா' பாடலில் நடனமாடியுள்ளார்.

