"அது நான் இல்லை.." - திடீரென எச்சரித்த நடிகை அதிதி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பின்னணி என்ன?
இந்திய திரையுலகில் பிரபல நடிகையான அதிதி ராவ் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது பெயரில் நடக்கும் மோசடி குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த அதிதி ராவ்விற்கு, தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. பரதநாட்டிய கலைஞராக தனது கலை பயணத்தை தொடங்கிய அதிதி ராவ், பின்பு மலையாளத்தில் பிரஜபதி எனும் படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார். தமிழில் அவரை பெரிதாக தூக்கி விட்ட படம், ’காற்று வெளியிடை’. இந்த படத்தில் அவர் லீலா எனும் பெயரில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து இவருக்கு செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவை அனைத்திலும் இவரது கதாப்பாத்திரம் மட்டும் தனி கவனம் பெற்று ரசிகர்களை ஈர்த்தது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அது சபந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதிதி ராவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதில், வாட்ஸ் அப்பில் தன் பெயர் மற்றும் புகைப்படத்தை யாரோ தவறாக பயன்படுத்துவதாகவும், இதை வைத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார்.
”யாரோ வாட்ஸ் ஆப்பில் என்னை போல, பிற போட்டோ கிராபர்களிடம் போட்டோ ஷூட்ஸ் குறித்து பேசி வருகின்றனர். அது நான் இல்லை. நான் அப்படி யாரிடமும் பேச மாட்டேன். நான் எனது பெர்சனல் மொபைல் நம்பரை, வேலைக்காக உபயொகிக்க மாட்டேன். கவனமாக இருங்கள், யாரும் இதற்கு ரிப்ளை செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் எனது குழுவை வைத்துதான் நகர்த்துவேன். இப்படி உங்களுக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், எனக்கு தெரிய படுத்துங்கள்” என்று கூறியிருக்கிறார். ஏமாற்றுவதாக சொல்லப்படும் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ஏமாற்றும் அந்த நபர், அதிதி ராவின் இன்ஸ்டாகிராம் போட்டோவையே, வாட்ஸ் அப் பிக்சராகவும் வைத்திருக்கிறார். இது, தற்போது நெட்டிசன்கள் இடையே கவனத்தை பெற்று வருகிறது.
அதிதி, தற்போது இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். லையனஸ் என்கிற ஆங்கில படத்திலும் இவர் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஹீராமண்டி என்கிற தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

