"அதோட வாய மூடியவன்தான்.. பின் பேசவே இல்ல" - அஜித் உடனான கலகல சம்பவத்தை பகிர்ந்த ரமேஷ் கண்ணா
விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி நடிப்பில் சித்திக் இயக்கிய படம் `ப்ரண்ட்ஸ்'. இந்த படம் அதன் பாடல்களுக்காகவும், எமோஷனல் காட்சிகளுக்காகவும் குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது டால்பி அட்மாஸ் ஒலியுடன் 4K வடிவத்தில் திரையரங்குகளில் நவம்பர் 21ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கான டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா சூர்யாவின் காதலுக்கு தான் தூது சென்றது பற்றி பகிர்ந்திருந்தார். அவர் அதனை பற்றி பேசிய போது "ப்ரண்ட்ஸ் பட சமயத்தில் நானும் சூர்யாவும் மிக நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவோம். அதில் சந்தோஷமான விஷயம் என்ன என்றால், உடுமலைபேட்டையில் `ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பு, `தெனாலி' படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கும். இங்கு ஒருநாள் அங்கு ஒருநாள் என பிசியாக நடித்தேன்.
ப்ரண்ட்ஸ் ஷூட்டில் இருந்து கிளம்பும் போது 'ஜோதிகாவை கேட்டதாக சொல்லுங்கள்' என்பார் சூர்யா. நான் அங்கு சென்று சூர்யா உங்களை கேட்டதாக சொன்னார் என ஜோதிகாவிடம் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொல்வேன். அவரும் கிளம்பும் போது சூர்யாவிடம் தன்னை பற்றி கூறும்படி சொல்வார். சூர்யாவிடம் 'தங்கச்சி உன்னை கேட்டதாக சொன்னது' என்பேன். இதில் அந்த இருவருக்கும் மிக மகிழ்ச்சி. இவர்கள் இருவருக்கும் தூது செல்வதே எனக்கு வேலையாக இருந்தது. அப்படி காதலை வளர்த்த ஒரு படம் அது.
அந்தப் படம் மட்டுமா, அமர்களத்திலும் அப்படித்தான். ஷாலினியும் அஜித்தும் காதலித்து வந்தனர். அது எனக்கு தெரியாது. நான் அஜித்துக்கு சினிமாவில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்ளாதே என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தேன். நான் இப்படி சீரியஸாக பேசுவதை சரண் மானிட்டரில் பார்த்து என்னை கூப்பிட்டு என்ன பேசினேன் எனக் கேட்டார். சினிமாவில் இருப்பவரை காதலிக்க வேண்டாம் எனக் கூறினேன் என சொன்னேன். அடப்பாவி அவர் ஷாலினியை காதலிக்கிறார், அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம். அதோடு வாயை மூடியவன்தான், பின்பு பேசவே இல்லை" என்றார்.

