மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்! - ஷங்கர் | CM Vijay | Shankar
முதல்வராக பதவி ஏற்ற விஜயின் வெற்றியை, `முதல்வன்' படத்தை இயக்கிய ஷங்கர் சிறப்பு பதிவில் பாராட்டியுள்ளார். மக்களின் விருப்பம் நிறைவேறி, மாஸ் தொடக்கத்துடன் விஜயின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்தியுள்ளார். ஒருகாலத்தில் திரையில் நடிக்க தயங்கிய `முதல்வன்' கதையை, இன்று நிஜ வாழ்க்கையில் விஜய் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
த வெ க தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களின் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து ஆதரவு காட்சிகளின் உதவியோடு பெரும்பான்மையை காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுப் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்படி இன்று இயக்குநர் ஷங்கர் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் "இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஒரு மாஸ் தொடக்கத்தோடு உங்கள் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிரதர்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வெளியான `முதல்வன்' படத்தின் கதை ரஜினிக்கு பின்னர் விஜய்க்கு சொல்லப்பட்டதும், அப்போது விஜய் அதில் நடிக்க தயங்கினார் என்பதும் கடந்த கால தகவல்கள். இப்போது நிஜ வாழ்க்கையிலேயே விஜய் முதல்வன் ஆகி இருக்கிறார்.

