பாடலாசிரியராக ரவி மோகன்.. இசையமைப்பாளராக கெனிஷா! | Ravi Mohan | Keneeshaa | En Vaanam Nee
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடிப்பில் அடுத்ததாக `ஜீனி', `கராத்தே பாபு', `ப்ரோ கோட்' போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் இயக்குநராக யோகிபாபு நடிப்பில் `An Ordinary Man' படத்தை இயக்க உள்ளார். மேலும் தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் `ப்ரோ கோட்' மற்றும் `An Ordinary Man' ஆகிய படங்களை தயாரித்தும் வருகிறார். இப்படி புதுப்புது அவதாரங்கள் எடுத்துவரும் ரவி, இப்போது பாடலாசிரியர் அவதாரமும் எடுத்துள்ளார். `என் வானம் நீயே' என்ற அப்பாடல் இப்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலின் இசையமைப்பாளர் மற்றும் பாடகி கெனிஷா கூறுகையில், " ‘என் வானம் நீயே’ உருவாக்கும்போது என் தாயை நினைத்துக்கொண்டே இருந்தேன். தாய்மார்கள் எப்படியெல்லாம் நம்மை வானம்போல காத்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்தே இந்த பாடலை அமைத்துள்ளோம். இது வெறும் ஓர் இசை அல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஓர் உணர்ச்சி. இந்த மெலடியை கேட்பவர் ஒவ்வொருவரும் தங்களது தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் உணருவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
இப்பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் ரவி மோகன், "முதல் முறையாக எழுதுவது என்பது எனது மனத்தின் மிக ஆழமான பகுதியைத் திறந்ததுபோல இருந்தது. ‘என் வானம் நீயே’ என் தாயிடமிருந்து வந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு. அன்றாட வாழ்வின் அன்பான, கவனிக்கப்படாத தருணங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகின்றன என்பதைக் குறித்த பாடல்.
அந்த நன்றி, அந்த பாசத்தை மிக நேர்மையான, எளிமையான சொற்களில் வெளிப்படுத்த வேண்டுமென்றே இதை எழுதினேன். இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கும் எனது இதயபூர்வமான வணக்கமாக சமர்ப்பிக்கிறேன்" என்றார்.