9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ரவி மோகன் வழக்கு!
செய்தியாளர்: சுப்பையா
கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார்.
பின்னர், மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாட்கள் ஒதுக்கிய போதும், படப்பிடிப்பை நடத்தாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும், அதனால் படத்திலிருந்து விலகியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்த போது, முன் பணமாக தந்த ஆறு கோடி ரூபாயை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தையும் , தயாரிக்கும் வேறு படங்களையும் விற்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் படி உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறியபோதும், 7 நாட்களில் முன்பணத்தை திருப்பித்தர கேட்கின்றனர். வேறு படங்களில் நடிக்க முடியவில்லை என ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகைபாலன் வாதிட்டார்.
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி நடிகர் ரவி மோகன், பராசக்தி படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23 ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன், நடிகர் ரவி மோகனின் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.