பா ரஞ்சித், மாரி செல்வராஜ் விருதுகளுக்காக படம் பண்ணுவது இல்லை! - மிஷ்கின் | Mysskin
72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. 2024ல் வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அமரன், கேப்டன் மில்லர், ராயன், மெய்யழகன், மகாராஜா போன்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்றோர் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படுகின்றன என்ற கருத்துக்கள் எழுந்தன.
இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த மிஷ்கினிடம் தேசிய திரைப்பட விருது குறித்து கேட்கப்பட "ஒரு நல்ல படத்தை எடுத்த பின்னர் அதற்கு விருதே தேவை இல்லை. விருது என்பது ஒரு ஊக்கம் மட்டும் தான். தங்கலான், வாழைக்கு கிடைக்கவில்லை என நாம் குறை சொல்லக் கூடாது. பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் விருதுகளுக்காக படம் பண்ணுவது கிடையாது. விருதுகள் கிடைத்த வரை சந்தோஷப்பட்டுக் கொள்வோம், வாழ்த்துவோம்.
இது எல்லாமே ஒரே குடும்பம் தான். என் பக்கத்தில் இருப்பவனுக்கு தான் விருது கிடைத்திருக்கும். அப்படி நடக்கும் போது தட்டிக் கொடுக்க வேண்டும். நமக்கு கிடைக்கவில்லை என வருத்தப்பட கூடாது. நான் இதுவரை எந்த விருதுகளுக்கு என் படங்களை அனுப்பியது கிடையாது. இனி அனுப்பவும் போவதில்லை. மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து வெற்றியடைய வைத்துவிட்டால் அதைவிட வேறு என்ன விருது இருக்க முடியும். ஒரு நல்ல விருது என்பது 25 வருடம் சினிமாவில் பணியாற்றிவிட்டு வெளியே செல்லும் போது, அவனது பிள்ளைகள் `என் அப்பா/தாத்தா பெரிய கலைமாமணி' என சொல்ல வேண்டும். அதுதான் விருது." என்றார்.

