“படம் தாமதமாக வந்தாலும் நன்றாக வரும்”- லோகேஷ் உடனான படம் குறித்து ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சிவ ராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்ததால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் படம் பட்டையை கிளப்பியது. வசூலை பொறுத்தவரையில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது” என கூறப்பட்டிருந்தது. நடிகர் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கொடுத்திருந்த நிலையில், ரஜினி-லோகேஷ் கூட்டணியின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
171வது படம் குறித்து ரஜினியே கொடுத்த மாஸ் அப்டேட்!
இந்திய சினிமாவில் வெற்றி இயக்குநர்கள் வரிசையில் லோகேஷ் கனகராஜும் வளர்ந்து வரும் நிலையில், ரஜினி உடனான கூட்டணி அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சில தோல்வி படங்களுக்கு பிறகு ஜெயிலர் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து ரஜினி தன்னுடைய வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து மிகுந்த நம்பிக்கையில் இருக்கும் ரஜினிகாந்த் அவராகவே ஒரு மாஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவில் கலந்துகொள்ள புறப்பட்ட ரஜினியிடம், 171வது திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போது லைகா தயாரிப்பில் படம் நடித்து வருவதாகவும் அது முடிந்த பிறகுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த படம் தாமதமாக வந்தாலும் நன்றாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.