ஓடிடி தளங்களில் படத்தை விற்பது சவாலாக இருக்கிறது! - பா இரஞ்சித் | Pa Ranjith | Dark
அஜய் கார்த்தி, அஞ்சனா, நட்ராஜ் நடித்த ‘டார்க்’ பட ட்ரெய்லர் வெளியீட்டில் பா. இரஞ்சித், சிறிய படங்களின் வெற்றியே தமிழ் திரையுலகின் எதிர்காலம் என கூறுகிறார். ஓடிடி தளங்களில் படங்களை விற்பது இன்று பெரிய தயாரிப்பாளர்களுக்குக் கூட சவாலாக மாறியதால், மீண்டும் தியேட்டர்களை நம்ப வேண்டிய சூழல் உருவாகியிருப்பதை அவர் வலியுறுத்தினார்.
அஜய் கார்த்தி, அஞ்சனா, நட்ராஜ் நடித்துள்ள `டார்க்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா இரஞ்சித் "கணேஷ் பாபு இயக்குநராக இருந்து கொண்டே, தயாரிப்பாளராகவும் படங்கள் செய்கிறீர்கள். உதவி இயக்குநர்களை எல்லாம் இயக்குநர்கள் ஆக்க நீங்கள் எடுக்கும் முயற்சி முக்கியமானது. ஒரு படம் எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க் தான். முதலீடு செய்யும் பணம் நமக்கு திரும்ப கிடைக்க வேண்டும். அப்படி வரவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய சிக்கலில் விடும் என்பது ஒரு தயாரிப்பாளராக எனக்கும் தெரியும். ஆனாலும் இந்த சவாலான காரியத்தை செய்யும் கணேஷுக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் உடன் இருக்க வேண்டும். இது போன்ற சின்ன படங்களின் வெற்றி மிக அவசியமானது என நினைக்கிறன்.
தமிழக அரசியல் சூழழில் எப்படி கணிக்கமுடியாத பயங்கரமான எழுச்சி உண்டானதோ, அதேபோல தமிழ் திரையுலகத்தில் சின்ன படங்கள் மக்களை தியேட்டர் நோக்கி அழைத்து வருகின்றது. சமீபத்தில் வந்த ப்ளாஸ்ட், சிறை இப்படியான படங்கள் நல்ல வசூல் செய்துள்ளது. ஓடிடி தளங்களில் படத்தை விற்கும் அணுகுமுறையே முற்றிலும் மாறியுள்ளது. பெரிய தயாரிப்பாளர்களுக்கு கூட ஓடிடி தளங்களில் படத்தை விற்பது சவாலாகி இருக்கிறது. பிரபல நடிகர்கள் இருந்தாலுமே படத்தை விற்பது சவாலாக இருக்கிறது. இன்றைக்கு ஓடிடி தளங்களே சக்தி வாய்ந்த இடத்துக்கு சென்றுவிட்டார்கள். படத்தை பார்ப்பது துவங்கி படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது வரை அவர்கள் முடிவு செய்யும் நிலையில் தனி தயாரிப்பாளர்களுக்கு படத்ததை எடுத்து வெளியிடுவது சிரமமாக இருக்கிறது.
எனவே இப்போது மீண்டும் வேறு வழி இல்லாமல் தியேட்டரை நம்பி ஆக வேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது. கொரோனா சமயத்தில் ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. கிட்டத்தட்ட அவர்களுக்குள்ளேயே ஒரு கூட்டமைப்பு போல் உருவாகி இருக்கிறார்கள். இந்த சூழலில் தியேட்டர்களில் ஒரு மாற்றம் நடக்கிறது. நிறைய மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். ஹபீபி கூட நிறைய காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடுகிறது. கம்மியான திரைகளில் வெளியானாலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது போல இன்னும் சினிமாவில் இருக்கும் சில பிரச்சனைகளை சங்கங்கள் முன்வந்து சரி செய்தால் சினிமா ஆரோக்யமாக இருக்கும்." என்றார்.

