"என்னுடைய ரசிகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்!" - சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan
Fanly என்ற செயலியின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் புல்லேலா கோபிச்சந்த், லட்சுமி நாராயணன், குகேஷ் தம்மராஜு, மணிகண்டன் தங்கரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, புதிய ஆப்பை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் "எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன். நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன். ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். கோபிசந்த் சார், மணிகண்டன் சார், உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நான் மேடை பகிர்ந்து கொள்ளும் நபர்களில் எனக்குத்தான் மூளை கொஞ்சம் கம்மி. அதனால்தான் நடிகராக இருக்க முடிகிறது.
எப்போதுமே நான் எனது ரசிகர்களை சகோதர, சகோதரிகளே என்றுதான் சொல்வேன். அவர்கள் என் குடும்பம். இந்த ஃபேன்லி பெயரை கேட்டால் ஃபேமிலி என்பதுபோல கேட்கிறது. அப்படி அழகான பெயரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நிறைய எதிர்மறை எண்ணங்கள் பரவிவரும் சூழலில் அதை எல்லாம் தவிர்த்து, நேர்மறையான மனநிலை ரசிகர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற யோசனையில் இந்த ஆப் வருகிறது எனச் சொன்னார்கள்.
எனக்கு எப்போதும் மனதில் இருப்பது, ரசிகர்களின் கவனம் சிதறக்கூடாது. ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என நான் நினைப்பேன் என்றால், என்னை வழிபடும் நபர்களாக அவர்கள் இருக்கக் கூடாது. கடவுளையும், தாய் தந்தையரையும்தான் வழிபட வேண்டும். என்னுடன் ஒரு சகோதரனைப்போல பழகக்கூடிய ரசிகர்கள்தான் எனக்கு இருக்க வேண்டும் என நினைப்பேன். அதற்கு ஏற்றாற்போல் ஒரு தளம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
சமூக வலைத்தளங்கள் என்றாலே தேவை இல்லாத விஷயங்களை தருகிறது என்ற பயம் உருவாகியிருக்கிறது. நான் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறேன், ஆனால் எதையும் நான் பயன்படுத்துவதில்லை. அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டா மட்டும் பயன்படுத்தி வந்தேன், ஆனால் கைதவறி ரீபோஸ்ட் செய்துவிடுவேன் என்ற பயத்தில் இப்போது அதையும் பயன்படுத்துவதில்லை. மேலும் அங்கு இருக்கும் தகவல்கள் சரியானதா என்ற சந்தேகமும் இருக்கிறது. கூடவே நெகட்டிவான விஷயங்களுக்குதான் வரவேற்பு இருக்கிறது என அந்த தளங்களே, அப்படியான கன்டென்ட்க்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இது எதுவும் இல்லாமல் ஒரு ஆப் கொண்டுவர முடியும் என இந்தக் குழு காட்டி இருக்கிறார்கள். இதற்குள் அனிருத் வர வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு மிக பொருத்தமான இடம் இது" என்றார்.

