"தமிழ் சினிமா 1000 கோடி வசூல் செய்யுமா?" - சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | Sivakarthikeyan
இந்தியாவில் சினிவைப் பொறுத்தவரை திரைப்படங்கள் 1000 கோடி வசூல் செய்வது என்பது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியில் `டங்கல்', `பதான்', `ஜவான்', தெலுங்கில் `பாகுபலி 2: The Conclusion', `RRR', `புஷ்பா 2: The Rule', `கல்கி 2898 AD', கன்னடத்தில் `K.G.F: Chapter 2' உள்ளிட்ட படங்கள் இந்த இலக்கை அடைந்தும் இருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவில் எந்தப் படம் அந்த இலக்கை எட்டும் என்பது பல காலமாக ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ரஜினிகாந்தின் `கூலி' அந்த வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அது நிகழவில்லை.
இது பற்றி சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது, "1000 கோடி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. நான் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் 'அமரன்' திரைப்படத்தைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை.
ஒரு படத்தின் தரத்தைத் தவிர, டிக்கெட் விலையைப் போன்ற வேறு சில காரணிகளும் இதில் முக்கியம். நான் டிக்கெட் விலையை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால், பெங்களூரு அல்லது மும்பையில் உள்ள டிக்கெட் விலைகள் போல் இங்கே இருந்திருந்தால், 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.800 கோடி அல்லது ரூ.1000 கோடியைக் கூட எளிதாகக் கடந்திருக்கும்.
தமிழ் சினிமா வட இந்திய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் நான்கு வாரங்களுக்கான ஓடிடி ஒப்பந்தத்தைச் செய்கின்றன. ஆனால், மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன.
இந்தச் சிக்கலால், 'அமரன்' திரைப்படம் வட இந்தியாவில் பரவலாகச் சென்றடையவில்லை. தமிழ் திரையுலகம் விரைவில் அந்த இலக்கை எட்டும். ஒருவரால் மட்டும் இதைச் செய்வது எளிதல்ல. ஆனால், தமிழ் சினிமா அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் ரூ.1000 கோடி வசூல் என்ற சாதனை நிகழும் என்றும் நம்புகிறேன்" என்றார்.