ஓடிடியில் கவனம் பெறும் மாரீசன்.. குணசித்திர கதாபாத்திரங்களில் மாஸ் காட்டும் வடிவேலு!
பன்முகத் திறன் கொண்ட கலைஞனை சினிமா, ஒரே பாதையில் பயணிக்கவிடாது என்பார்கள்.. அப்படி, காமெடியனாக அசத்திக் கொண்டிருந்த வடிவேலுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களை நோக்கி திருப்பியிருக்கிறது, தமிழ் சினிமா.
சுதீஷ் சங்கர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான மாரீசன், கடந்த ஜூலை மாதம் வெளியானது. மாரீசன் ஒரு காமெடி த்ரில்லர் என்று வகைப்படுத்தப்பட்டாலும், அதன் முக்கிய கதைக்களம், மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் (வடிவேலு) மற்றும் அவரைப் பின்தொடரும் ஒரு சிறிய திருடன் (ஃபஹத் ஃபாசில்) ஆகியோரைச் சுற்றி நகர்கிறது. இதில் எதிர்பாராத திருப்பங்களும், உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்திருக்கின்றன.
திரையரங்க வெளியீட்டில் மிகக்குறைந்த அளவே கவனம் பெற்ற இப்படம், ஓடிடி ரிலீஸில் வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்க வெளியீட்டில் பெரிதாக பேசப்படாததற்கு ப்ரோமோசன்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தப்படாததே காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஓடிடி வெளியீட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான மாரீசனைப் பார்த்த பல பார்வையாளர்கள் இதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். வடிவேலு, ஃபஹத் ஃபாசிலுடன் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.
இது, நடிப்பு அரக்கன் ஃபஹத் ஃபாசிலுடன், வடிவேலுவின் 2ஆவது திரைப்படம். காமெடியில் வயிறு வலிக்க சிரிக்க வைத்த வடிவேலு, இப்படத்தில் சென்டிமெண்டில் அழ வைக்கிறார். இதற்கு முன்னதாக மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தையும் குறிப்பிடவேண்டும்.
காமெடியனாக இருந்த சூரியை வெற்றிமாறன் எப்படி விடுதலை நாயகனாக மாற்றினாரோ, அதேபோல் வடிவேலுவை மாமன்னனாக மாற்றினார், மாரிசெல்வராஜ்.. அதிலும், அசத்தலான நடிப்பால் இதயங்களை வென்றார். குறிப்பாக சமூகநீதியை குறித்தும், மாநில அரசியல் அமைப்புகளில் சாதிய ஒடுக்குமுறைகளை பற்றியும் வரும் காட்சிகளில், வடிவேலுவின் நடிப்பு மிகுந்த பாராட்டினைப் பெற்றது. காமெடி மட்டுமில்லாமல், இல்லங்களில் உள்ள மக்களின் உங்களைத் தொடும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வடிவேலு நடிக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.