மீண்டும் படம் இயக்கப் போகிறேன்! - கே பாக்யராஜ் அறிவிப்பு | K Bhagyaraj
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். இந்த நிகழ்வில் பேசிய அவர் "10 - 20 வருடம் தான் என நினைத்தேன், ஆனால் 50 வருடங்களை கடந்துள்ளதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த வளர்ச்சிக்கு காரணம் பலரும் என்னை நம்பியது தான். சென்னை வந்து நிறைய நாள் போராடிய பின் எங்க இயக்குநரின் முதல் படம் `பதினாறு வயதினிலே'யில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. நேற்று கமல் சாரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது கூட அந்தப் படம் வெளியாகி 2 வருடங்களுக்குள் எல்லோருக்கும் பெரிய வளர்ச்சி எனக் கூறினார். நான் வாய்ப்பு தேடும் சமயத்தில் யாராவது என் பெயரை கேட்டால் நிஜ பெயரை சொல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என கோவை ராஜா என காலரை தூக்கிவிட்டு சொல்லுவேன். `பதினாறு வயதினிலே'யில் என் பெயரை போடும் போதுதான் கே பாக்யராஜ் எனப் போட சொன்னேன். அதை பார்த்த எங்கள் இயக்குநர், யாருயா இவன் என அதிர்ச்சியானார். அதன்பின் நான் தான் அது எனக் கூறி புரிய வைத்தார்கள். அந்தப் பெயர் இன்றுவரை எனக்கு மரியாதையை பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அவர் இப்போதுவரை ராஜன் என்று தான் கூப்பிடுவார். `கிழக்கே போகும் ரயில்' சமயத்தில் கூட `எனக்குப் பிறகு பெரிய ஆளாய் ராஜன் தான் வருவான்' எனக் கூறினார்.
உதவி இயக்குநர், கதாசிரியர் என வளர்ந்து ஹீரோவாக ஆனேன். `கிழக்கே போகும் ரயில்' படத்தில் சுதாகரை கழுதையில் ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சியில் அந்தக் கழுதையை இழுத்து வர வேண்டிய நபர் சரியாக நடிக்கவில்லை என நான் அதில் நடித்தேன். அந்தப் படம் வெளியான பின் ஊரெல்லாம் நான் கழுதையை இழுப்பது போல போஸ்டர் அடித்துவிட்டார்கள். போயும் போயும் இந்தக் கழுதையை இழுக்கவாடா சென்னை போன எனக் கிண்டலும் செய்தார்கள். அப்போது என் அம்மா, நீ ஏன் சுதாகர் செய்த பாத்திரம் போல ஒன்றில் நடிக்கக் கூடாது என்றார். இல்லை அதற்கு என ஒரு உருவம் வேண்டும் எனக் கூறினேன். இல்லை இல்லை நீ பார், உங்கள் இயக்குநர், உன்னை வைத்தே படம் இயக்குவார் என்றார். அப்படி அவர் இயக்கத்தில் நான் `புதிய வார்ப்புகள்' படத்தில் நடித்தேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே நான் நடித்தை அவரால் பார்க்க முடியவில்லை. பின்பு படத்தை பார்த்த போது, எனக்கு அம்மா, அப்பா இல்லை இறந்துவிட்டார்கள் என ஒரு வசனத்தை நான் எழுதி இருந்ததை கவனித்தேன். அவர் உயிரோடு இருந்த போதே அப்படி எழுதிவிட்டேன். அதற்குத்தான் அபசகுனமாக இப்படி எழுதக்கூடாது என்பதை உணர்ந்தேன்.
சென்னைக்கு வந்த பின்புதான் சினிமாவை கற்றுக் கொண்டேன். பள்ளியில் சரியாக படிக்காத நான், இங்கு வந்து பல புத்தகங்களை படித்தேன். நடிப்பு, இயக்கம் எனப் பல படங்கள் செய்தேன் எனக்கு ஆதரவு தந்தீர்கள். என்னுடைய சிறிய வயதில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் 1ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், பள்ளி முடிந்து திரும்பி வரும் போது தின்பண்டம் வாங்கிக் கொள்ள ஓட்டை போட்ட காலணா கொடுப்பார் அம்மா. ஒருநாள் வந்த போது வீட்டில் என்னுடைய அம்மா இல்லை. நானே பெட்டியை திறந்து காசை எடுத்துக் கொண்டு போய் கடையில் கொடுத்தேன். கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்துவிட்டு, மிட்டாய் கொடுத்தார். வீட்டுக்கு திரும்பிப் போன போது அந்தக் கடைக்காரரும் இன்னும் சிலரும் வீட்டில் இருந்தார்கள். என் அம்மா சொன்ன பின்புதான் தெரிந்தது, நான் கொண்டு போனது காசில்லை, தங்க மோதிரம். அப்போது கடைக்காரர் நேர்மையை பார்த்து எனக்கும் நேர்மையின் மீது மதிப்பு வந்தது.
அதே போல என் படத்தில் சண்முகமணி என்ற பெயரை பயன்படுத்தி இருப்பேன். அது என்னுடைய சண்முகமணி மாஸ்டர். அவர் இன்று காலை அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். நான் நன்றாக படிக்கவில்லை என்றாலும், வாத்தியார்களுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. அதே போல எம் ஜி ஆரின் உதவும் குணம், சிவாஜி சார் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதம், என்றும் குணம் மாறாத ரஜினியின் தன்மை, கமல்ஹாசனின் நடிப்பு என என்னுடைய சீனியர்கள் அனைவரும் நல்ல வழிகாட்டிகளாக இருந்தனர். என்னுடைய உயர்வுக்கு இதெல்லாம் காரணமாக இருந்தது. இப்போதுவரை தொடர்ந்து நடிக்கிறேன். இந்த ஆண்டு படமும், வெப்சீரிசும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. இந்த வருடத்தில் இருந்து மீண்டும் ஒரு உத்வேகத்தோடு படங்கள் செய்யலாம் என இருக்கிறேன்" எனப் பேசினார்.

