"நான் நடிச்ச வீடியோவ விஜய் சார் பாத்து..." - மோனிஷா ப்ளஸ்ஸி | Monisha Blessy | Vijay | Jana Nayagan
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி எனப் பலரும் நடித்துள்ளனர். நடிகை மோனிஷா ப்ளஸ்ஸியும் இப்படத்தில் நடித்துள்ளார். ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் மோனிஷா பேட்டி ஒன்றில் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
"ரஜினிகாந்த் சாரின் `கூலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் `ஜனநாயகன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. விஜய் சாரின் கடைசிப் படத்தில் நாம் இருக்கிறோம் என்ற சந்தோஷம் வந்தது. படத்தின் பூஜைக்குச் சென்றபோது, ஒவ்வொருவரையும் விஷ் செய்துகொண்டே வந்தார். எனக்கும் அவர் கை கொடுத்தபோது, இது கனவா.. நிஜமா? என்ற சந்தேகம் வந்தது. அன்று அவருடன் புகைப்படம் எடுத்த தருணம் இன்னும் என் நினைவில் இருந்து அகலவில்லை. அந்தப் புகைப்படம் எனக்கு அனுப்பப்பட்டபின் பார்த்தபோது, என் கண்கள் தானாக கலங்கியது.
அது நடக்கும்போது, இதெல்லாம் நடக்கிறதா என்று என்னால் ப்ராசஸ் செய்யவே முடியவில்லை. அந்தப் புகைப்படம் பார்த்ததும்தான் புரியவே ஆரம்பித்தது. என் அம்மா, அப்பா நான் விஜய் சார் படத்தில் நடிப்பதை நினைத்து பெருமைப்படும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவர் மிகவும் நல்ல மனிதர். அனைவரையும் சமமாக நடத்துவார். என்னைப் பற்றி மிக அக்கறையாக விசாரித்தார். நான் மைம் செய்வேன் எனச் சொன்ன போது, மைம் செய்து நடித்த வீடியோக்களை எல்லாம் காட்டச் சொல்லி, பெரிதும் பாராட்டினார். நீங்கள் பேசும் மேடைப் பேச்சுகள் நன்றாக இருக்கிறது, ரொம்பவும் Motivate செய்வதுபோல இருக்கிறது எனச் சொல்வேன். அதை எல்லாம் பொறுமையாக கேட்பார். ஒரு சமயம் சார் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தபோது `சார் தூங்குறீங்களா' என்றேன், `அதான் எழுப்பிட்டீங்களே' என கிண்டலாக சொல்வார்" என்றார்.

