விஜய் நடித்த `உன்னை நினைத்து' வீடியோவை வெளியிட்ட விக்ரமன்! | Vikraman | Vijay | Unnai Ninaithu
விக்ரமன் இயக்கிய `உன்னை நினைத்து' படத்தில் முதலில் விஜய் நடித்த வீடியோ வெளியாகியுள்ளது. சூர்யா, லைலா, சினேகா நடித்த இந்த படத்தில், விஜய் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக, சூர்யா நடித்தார். தற்போது, விஜயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் விக்ரமன் இயக்கி 2002ல் வெளியான படம் `உன்னை நினைத்து'. இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய். அவரை வைத்து சில தினங்கள் படப்பிடிப்பும் கூட நடந்தது. ஆனால் சில காரணங்களால், விஜய் படத்திலிருந்து விலக பின்னர் அவருக்கு பதிலாக சூர்யா நடித்தார். இதுவரை `உன்னை நினைத்து' படத்தில் லைலா உடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. இப்போது படத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் விக்ரமன் தான் இயக்கிய படங்களின் அனுபவங்களை பற்றி பேசி வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அப்படி இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் "சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் பட இசை வெளியீட்டு நிகழ்வில் விஜய், இதுதான் என்னுடைய கடைசி படம் என சொன்னார். அது உண்மையில் மிகவும் வேதனைக்குரியது.
இந்த நேரத்தில் எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தது. அவரை வைத்து தான் முதலில் `உன்னை நினைத்து' படத்தை ஷுட் செய்தேன். ரெண்டு பாடல்களை கூட படமாக்கினேன். மூணாரில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலை படமாக்கினேன். அந்த வீடியோவை இப்போது பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள்" என்றார்.
மேலும் அந்தப் பதிவில் "உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற `என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் Social மீடியாவில் வைரல் ஆனது. இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன். அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஓன்று கிடைத்தது. மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன். இந்த வீடியோவை, சூர்யா நடித்த வீடியோவுடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள், இருவரும் அற்புதமான நடிகர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

