உறுதியான ஜேசன் சஞ்சயின் `சிக்மா' ரிலீஸ்.. புது தேதி அறிவிப்பு | Sigma | Jason Sanjay
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’ மீது ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2023ல் அறிவிக்கப்பட்ட இந்த லைகா தயாரிப்பு, கடந்த டிசம்பரிலேயே படப்பிடிப்பு முடிந்து, டீசர் மூலம் நல்ல ஹைப் பெற்றது. ‘ஜன நாயகன்’ ரிலீஸ் காரணமாக ஜூலை 31ம் தேதியிலிருந்து தள்ளிப்போன இந்த படம், புதிய அறிவிப்பின்படி அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிக்மா'. தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவானது. இப்படத்தில் சந்தீப் உடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் விஜய் நடிப்பில் உருவான `ஜன நாயகன்' படம் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்த மாதம் வெளியாக இருந்த பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
அதில் முக்கியமாக ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா' படமும் சிக்கியது. இப்போது `ஜன நாயகன்' புயல் ஓய்ந்த நிலையில், ஒவ்வொரு படமாக வெளியாக இருக்கிறது. ஜேசன் சஞ்சயின் `சிக்மா'வும் வர இருக்கிறது. அக்டோபர் 2ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என இன்று புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். முன்பு ஜேசன் சஞ்சய் அளித்த பேட்டிகளின் மூலமாக இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

