அப்பா - மகன் சண்டையால் நின்ற படம்.. வேதனை பகிர்ந்த சேரன்! | Cheran | Ayya | Ramadoss
சேரன் இயக்கத்தில் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ என்ற பெயரில் ஆரி நடிப்பில் உருவாக இருந்த படம், அப்பா–மகன் மோதலால் நடுவே நின்று கைவிடப்பட்டது. முதலில் இந்த பயோபிக் இயக்கம் சங்ககிரி ராஜ்குமாருக்கே இருந்தது; அவரது கனவை பறிக்க விரும்பாத சேரன், இருவரும் பல ஆண்டுகள் ஆய்வு, லொகேஷன் தேடலில் உழைத்தும், படைப்பாளியின் கனவு திரையில் வராத வேதனையை பகிர்ந்துள்ளார்.
சேரன் இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) `அய்யா' என்ற பெயரில் ஆரி நடிப்பில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும் வெளியான நிலையில், தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டது என சமீபத்திய நிகழ்வில் அறிவித்துள்ளார் இயக்குநர் சேரன். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே படத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி உருவாகியுள்ள 'ஒன்' (ONE) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சேரன், "மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எனக்கு முன்பு எடுப்பதாக இருந்தவர் தம்பி சங்ககிரி ராஜ்குமார்தான். அவர் தான் அதற்கான கதையை எழுதி, செய்ய வேண்டியது. ஆனால் ஒரு சில காரணங்களால், அதற்கு சில பலம் வேண்டும் என நினைத்து தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் என்னை அணுகியபோது, 'ராஜ்குமாரே இந்தப் படத்தை இயக்கட்டும், நான் கூட இருந்து ஆதரவு தருகிறேன்' என்றுதான் கூறினேன். அவர் தயாரித்து வைத்திருக்கும் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னதும் எனக்கு நெருடியது. ஏனெனில் ஒருவரது கனவை நான் தட்டிப்பறிக்க விரும்பவில்லை.
ஆனால், ராமதாஸ் ஐயா என்னிடம் சில விஷயங்களை சொல்லி படம் எப்படி வர வேண்டும் என்பதை எல்லாம் சொன்னார். உடனே ராஜ்குமாரிடமும் ஐயாவின் அன்பையும் வேண்டுகோளையும் என்னால் தட்ட முடியாவில்லை என விளக்கினேன். நான் அந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அந்தப் படம், 'உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை' என்ற கதையாக ஆகிவிட்டது. இவருடைய உழைப்பு 2 வருடங்கள், என்னுடைய உழைப்பு ஒன்றரை வருடம். 1987-ம் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் என்பதால், அந்தக் காலக்கட்டத்திற்குரிய கிராமங்களையும், மனிதர்களையும் தேடி நானும் எனது 15 பேர் கொண்ட குழுவும் தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் அலைந்து திரிந்து லொகேஷன்களைத் தேர்வு செய்து, பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.
ஆனால் அந்தப் படம் நடக்கவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய வலி. வேலை பார்த்தவரை சம்பளம் கொடுத்துவிட்டேன் என அவர்கள் சொல்லலாம். ஆனால் ஒரு படைப்பாளனுக்குச் சம்பளத்தை விடத் தன் கற்பனை திரையில் வந்தால் சம்பளமே கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் அப்படிப்பட்ட பைத்தியமான இயக்குநர். நான் எடுத்த படம் எனக்கு வெளியே வர வேண்டும். ஆனால் வரவில்லை. காரணம் அப்பா மகன் சண்டை போட்டார்கள் படம் நின்றது. இன்று சேர்ந்துவிட்டார், படம் எடுக்க ஆள் இல்லை. இப்படி சினிமா நம்மை எங்கு கொண்டு செல்லும், எப்போது ஏமாற்றும் என எதுவுமே சொல்ல முடியாது." என்றார்.

