`இருவர்' படம் வெளியான அன்றே ஃபிளாப்! - பிரகாஷ்ராஜ் பகிந்த அனுபவம் | Iruvar | Prakash Raj
பிரகாஷ் ராஜ் 'இருவர்' படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். அவர் தமிழும் திராவிட இயக்க வரலாறும் தெரியாமல், கன்னடத்தில் தமிழின் ஓசையை எழுதிக் கொண்டு நடித்தார். படம் வெளியான அன்று தோல்வியடைந்தாலும், காலம் கடந்து மக்கள் அதை நேசிக்கத் துவங்கினர். இது அவருக்கு கமர்ஷியல் வெற்றியை அளிக்கவில்லை என்றாலும், அவரை ஒரு நடிகனாக ஏற்க உதவியது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற Mathrubhumi International festival of Letters மற்றும் Wayanad Literature Festival ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த இரு நிகழ்வுகளிலும் `இருவர்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
பிரகாஷ் ராஜ் அதற்கு பதில் அளித்த போது "அது ஒரு சுவாரஸ்யமான படம். நான் அந்தப் படத்தில் நடிக்கையில் எனக்கு 30 வயது. கர்நாடகாவில் இருந்து வந்தவன் நான். எனக்கு தமிழும் தெரியாது, திராவிட இயக்க வரலாறும் தெரியாது. அப்போது அந்தப் படத்தின் பெயர் `ஆனந்தன்'. எம் ஜி ஆராக நடிக்க லாலேட்டன் 8 மாதங்களாக அதன் ஆராய்ச்சியிலும், தயாரிப்பிலும் இருந்தார். ஏற்கெனவே அவர் இரண்டு ஷெட்யூல் நடித்தும் முடித்திருந்தார். அப்போது மணிரத்னம் இந்தப் பாத்திரத்துக்கு நடிகரை தேடிக் கொண்டிருந்தார். நான் அவரது தயாரிப்பில் `ஆசை' படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஸ்க்ரீன் டெஸ்ட் கொடுத்தேன். அதே சமயத்தில் மம்மூட்டி, நானா படேகர் எனப் பலருடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் யாரும் நடிக்கவில்லை. எனக்கு நடிக்க வேண்டும் என ஆசை இருந்தாலும் நான் இளம் கருணாநிதிக்கு ஓகே, ஆனால் வயதான பின் என் தோற்றம் பொருந்தாது என நினைத்தார் மணி. ஆனால் என்னை வர சொல்லி நாளை மறுநாள் ஷுட் வந்துவிடுங்கள் என்றார். எனக்கு தயாராக இருந்தது வெறும் இரண்டே நாட்கள். மேலும் எனக்கு ஒருவரை போலச் செய்தல் வராது.
நான் கலைஞரின் உயரமோ, நிறமோ, அவர் போன்ற தூய தமிழ் பேச்சோ எனக்கு இல்லை. எனவே மணிரத்னத்திடம் `மணி என்னால் Imitate செய்ய முடியாது. நான் உங்களது தமிழின் ஓசையை கன்னடத்தில் எழுதிக் கொள்கிறேன். அதை பேசி நடிக்கிறேன், அது உங்கள் கதையை சொல்கிறதா எனப் பாருங்கள்' என்றேன். மேலும் அந்த சமயத்தில் எனக்கு இவ்வளவு அரசியல் புரிதல் இருந்திருக்கவில்லை. ஒரு நடிகனாக மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என முயலும் இளைஞனாக மட்டுமே இருந்தேன். எனக்கு அந்த பாத்திரம் தானாக அமைந்த ஒன்று. அதே சமயம் நடிப்பில் நான் மிக நேர்மையானவனாக இருந்தேன். இப்போது அந்த நடிப்பை பார்க்கையில் எப்படி இதை செய்தோம் என எனக்கே வியப்பாக தான் இருக்கிறது.
புது மொழியை கற்றுக் கொள்வது, `உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்' என தமிழ் கவிதை பேசி நடித்தது, திராவிட இயக்க வரலாறு மிகச்சிறந்த பேச்சுக்களின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டதை அறிந்தது என இருவர் ஒரு மிகச் சிறந்த அனுபவம். மேலும் அந்தப் படத்துக்காக கிடைத்த தேசிய விருது இந்த பையனுக்கு நடிக்க வரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. அந்த சமயத்தில் ஒரு நடிகனாக நான் அறியப்படுவதில் எனக்கு பசி இருந்தது, இப்போது அதன் அரசியலையும் நான் அறிந்து கொண்டேன். `இருவர்' படம் வெளியான அன்று மாலையே தோல்வியடைந்தது. ஆனால் காலம் கடந்து அந்தப் படத்தை மக்கள் நேசிக்க துவங்கினர். எனக்கு அந்தப் படம் கமர்ஷியல் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், என்னை ஒரு நடிகனாக மக்கள் ஏற்கவும், இன்னும் சொல்லப்போனால் நானே ஏற்கவும் உதவியது. என் அகம் சார்ந்து பல மாற்றங்களை நிகழ்த்தியது." என்றார்.

