தலைவர் 173| ’இவனா பன்றான்னு பயந்தாங்க..’ Fans-க்கு என்னோட Promise! - சிபி சக்கரவர்த்தி
ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும். சிபி, ரஜினியின் ரசிகர்களுக்கு படம் திருப்தியளிக்கும் என உறுதியளித்துள்ளார். பல இயக்குநர்களுக்குப் பிறகு சிபி தேர்வு செய்யப்பட்டார். இது அவரது கனவின் நிறைவேற்றம் என அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் `தலைவர் 173' படத்தை `டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கும் நிலையில், 2027 பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டது.
முதலில் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாகவும், பின்னர் லோகேஷுக்கு பதிலாக சுந்தர் சி இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பல இயக்குநர்களுக்கு பிறகு டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியை கமிட் செய்துள்ளது ரஜினி-கமல் காம்போ.
இந்தசூழலில் ரஜினி போன்ற பெரிய நடிகரின் படத்தை அனுபவமில்லாத வளர்ந்துவரும் இயக்குநர் இயக்குவாரா? அவர் இயக்கினால் படம் எப்படி வரும் என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.
ரசிகர்களுக்கு என்னோட பிராமிஸ்..
முதலில் ரஜினியின் தலைவர் 173 படத்தில் கமிட்டான போது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த சிபி, "ஒரு சிறு நகரத்திலிருந்து வந்த பையனுக்கு பெரிய கனவாக இருந்ததே, அவனுடைய ஆதர்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டாரை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுப்பதே. அதுவே அவனை சினிமாவை நோக்கி அழைத்து வந்தது. அந்தக் கனவும் ஒரு நாள் நிறைவேறியது. அதன்பின் அவனுக்கு தன் சூப்பர்ஸ்டாரை இயக்க வேண்டும் என்ற கனவு உருவானது. அதன் அருகில் வரை சென்றும், தவறிப்போனது. ஆனாலும் அது ஒரு நாள் நடக்கும் என அவன் தொடர்ந்து நம்பினான். அந்த நாள் இதுதான். #Thalaivar173 Day.
எனக்கு தலைவர் சொன்னது நினைவுக்கு வந்தது `கவனவுகள் நனவாகும், அற்புதம் நிகழும்'. உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிப்பாளர்களாக வந்தது என் கனவிற்கு அப்பாற்பட்ட ஒன்று. இதற்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் மற்றும் உங்கள் நம்பிக்கையை காக்க ஆத்மார்த்தமாக உழைப்பேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்தசூழலில் ரஜினியின் படத்தை இவன் இயக்குவானா? என தன்மீது பலர் சந்தேகித்த நிலையில், அதற்கு பதிலளித்திருக்கும் சிபி, “நான் 'தலைவர் 173' படம் பண்றேன்னு அறிவிச்சதும் பலர் வாழ்த்தினாங்க. சிலர் இவன் பண்றானானு பயந்தாங்க. தலைவர் ஃபேனா நான் சொல்றேன், இது ரசிகர்களும் குடும்பங்களும் தியேட்டர் விட்டு வெளிய வர்றப்போ திருப்தியோட வர்ற படமா இருக்கும். இது என் Promise!" என With Love பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசியுள்ளார்.

