மிஸ்ஸான விஜய் படம், `சார்பட்டா 2' ஷூட் எப்போது? - பா இரஞ்சித் சொன்ன தகவல் | Pa Ranjith | Vijay
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் பா.இரஞ்சித். அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் அடுத்த படங்கள் குறித்து கூறியுள்ளார். முதலில் `சார்பட்டா 2' படம் பற்றி கேட்கப்பட்ட போது, "சார்பட்டா 2 படத்தை நானும் தமிழ்பிரபாவும் எழுதி வருகிறோம். கிட்டத்தட்ட அதற்கு ஒரு வடிவம் வந்துவிட்டது. கொஞ்சம் ரீ ரைட் வேலைகள் மட்டும் இருக்கின்றன. ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஷூட் போகும் திட்டம் இருக்கிறது" என்றார்.
பாலிவுட்டில் அவர் இயக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட `பிர்சா முண்டா' பற்றி கேட்கப்பட, "பிர்சா முண்டா அப்படியே இருக்கிறது. கதை வேலைகள் எல்லாம் முடிவடைந்துவிட்டன. ஆனால், கதாநாயகன் அமைவதில் உள்ள சிக்கல்தான் பிரச்னை. இந்தியில் ஒரு பிரச்னை. ஒவ்வொரு நடிகரிடம் செல்லும்போதும், தேங்கித்தேங்கி நிற்கும். இப்போது ஒரு நடிகர் சம்மதம் சொல்லிவிட்டார். தயாரிப்பு நிறுவனம் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
’’விஜயுடன் இணைந்து பணியற்ற நினைத்ததில்லையா’’ என்றதும், "விஜய் சாரை வைத்து ஒரு படம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. நானும் கதை கூறினேன், அவருக்கு மிகவும் பிடித்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. நானும் அதில் பெரிய அழுத்தம் செலுத்தவில்லை. நம்மை அழைத்தால் போய் பணி புரியலாம், இல்லை என்றால் நம் வேலையைச் செய்யலாம் என்றுதான் நான் இயங்குவேன். ஆனால் அதற்குப் பின் அந்த வாய்ப்பு அமையவில்லை" என்றார்.
’’மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா’’ எனக் கேட்டதும், "அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு விருப்பம்தான். ஆனால், நான் சொல்லும் கதையும், அவர் விரும்பும் உலகமும் ஒன்றாக சேர்ந்தால் அது நடக்கலாம். ஆனால், எனக்கு அது நடக்குமா என தெரியவில்லை" என்றார்.
கடைசியாக, கமலும் நீங்களும் இணைந்த பணியாற்றுவீர்களா என்று கேட்கப்பட, "கமல் சாருக்கு ஒரு படம் செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். ரொம்ப நாளாக அது அப்படியே இருக்கிறது. இரண்டு கதைகளும் சொல்லி இருக்கிறேன். அவர் எப்போது அழைத்து துவங்கச் சொன்னாலும் செய்யலாம்" என்றார்.

