ஜி வி சார் உங்க ஃபங்க் செமயா இருக்கு! - பாராட்டிய கவின் | Kavin | G V Prakash | Happy Raj
ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஹேப்பி ராஜ்'. இதில் ஸ்ரீ கௌரிப் ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியம் எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவின் பேசிய போது "எனக்கு இந்தப் படம் பற்றி எதுவுமே தெரியாது. ஹேப்பி ராஜ் டீசர் பார்த்தேன். எனக்கு அதை பார்த்த போது `லவ் டுடே' பார்த்த போது இருந்த உணர்வு வந்தது. பின்னர்தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அசோசியேட் என்று தெரிந்தது.
எனக்கு பிடித்த நிறைய பேர் படத்தில் இருந்தனர். ஜிவி சார், மணி, முத்து, அதிர்ச்சி அருண் எனப் பலர். அதிர்ச்சி அருணுக்காக தான், நான் டாப் குக்கு எல்லாம் பார்த்தேன். அதில் அவன் செய்வது எல்லாமே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணா எப்போதும் ஒன்று சொல்வார். அவர் எப்போதுமே காஸ்டிங்கில் நிறைய மெனக்கெடுவார். ஒரு இயக்குநர் யோசிப்பதை சரியான நடிகர்கள் அமைந்தால் மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். நல்ல நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி கிணறு தாண்டியது போல என்பார். இந்தப் படத்தை பொறுத்தவரை அதில் முக்கால் கிணறு தாண்டி விட்டார்கள் என நினைக்கிறேன்.
ஜிவி சாரிடம் கூட `ஆளு பார்க்க செமயா இருக்கீங்க சார். 4 படத்துக்கு ஒரு படமாவது இப்படி செய்யுங்கள்' என இப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். அவரது ஃபங்க் மிகவும் பிடித்திருந்தது. கௌரி உங்களுடைய லவ்வர் படம் மிகவும் பிடிக்கும். மணியுடைய நடிப்பு எப்போதும் சிறப்பாக இருக்கும். அவருடன் போட்டியிடுவதே செமயான விஷயம். அதை நீங்கள் அருமையாக செய்திருக்கிறீர்கள். இதிலும் நன்றாக செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்." என்றார்.

