"விஜய்க்கு இருக்கும் இமேஜுக்கு அவர் பட டைட்டில் ஏன்?" - சர்ச்சை கேள்வி, கென் பதில் | Youth | Vijay
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்குமான விவாகரத்து பிரச்னை பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், விஜய்-த்ரிஷா இருவரும் சேர்ந்து ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியது பெரிய பேசு பொருளானது. தற்போது இந்த சர்ச்சையை பற்றி ஒரு சினிமா நிகழ்வில் கேள்வியாக கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.
பிரபல நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். `அசுரன்', `விடுதலை' போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது இயக்குநராகவும் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ள படம் `யூத்' தமிழில் இப்படம் மார்ச் 19 வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டது படக்குழு. அந்நிகழ்வில் பேட்டி ஒன்றில் இப்படத்துக்கு `யூத்' என தலைப்பு வைக்கப்பட்டதும் `அப்பா விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்து பேசுகிறார். அவர் பட தலைப்பு வைக்கிறாயே, சரியாக இருக்குமா?' என தன் அம்மா கேட்டதாகவும், அதற்கு அவர் `அப்பாவின் அரசியல் பயணத்துக்கும், என்னுடைய சினிமா பயணமும் வேறு வேறு. இந்தப் படத்துக்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும்' எனக் கூறியதாக தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற யூத் நிகழ்வில் இதனை குறிப்பிட்டு "விஜய் படத்தின் டைட்டில் `யூத்' அதனை உங்கள் படத்துக்கு டைட்டிலாக வைத்திருப்பது பற்றி ஏற்கெனவே பேசி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது விஜய் இமேஜ் இருக்கும் நிலையில் இந்த டைட்டிலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறீர்களா?" எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கென் "அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இது முற்றிலும் வேறு, முழுக்க முழுக்க சினிமா சம்பந்தப்பட்டது. என் தந்தை அரசியலிலும் இருப்பதால் அவருக்கு நிறைய கருத்துக்கள் இருக்கும். ஆனால் அது எதுவும் என்னுடைய கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அவரது வாழ்க்கை, அவர் விரும்புவதை அவர் பேசுவார், அதனை அவரே எதிர்கொள்வார்.
அதே சமயம் என் தந்தை எனக்கும் அந்த இடத்தை அளித்திருக்கிறார். முடிவுகளை எடுப்பது, என்ன செய்ய வேண்டும் என்பது எல்லாம் முழுக்க என்னுடையது. இதனை நான் முற்றிலும் இரு வேறு விஷயங்களாக பார்க்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் இன்று வரை விஜய் சாரின் ரசிகர்கள் இந்த டைட்டில் பயன்படுத்தியது குறித்து எங்களுக்கு ஆதரவு தான் அளித்துள்ளனர். மேலும் இந்த டைட்டில் எங்களுக்கு பெரிய அளவில் அடையாளத்தை தான் கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு சொத்து என்றே சொல்லலாம். எனவே இந்த தலைப்பு எங்களை பாதிக்கும் என நான் நம்பவில்லை." எனக் கூறியுள்ளார்.

