"இருப்பது ஒரு லைஃப், சாப்பாடுதான் முக்கியம்!" - பாவனா | Bhavana | Diet
பிரபல நடிகை பாவனா சமீபத்திய பேட்டியில் உணவின் மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் சுவைத்த உணவுகள் மறக்க முடியாதவை என அவர் கூறியுள்ளார். டயட் பற்றி அதிகம் கவலைப்படாமல், சுவையான உணவுகளை அனுபவிக்க விரும்புவதாகவும், உணவை கட்டுப்படுத்துவது அவருக்கு சிரமம் எனவும் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகை பாவனா. அவர் தமிழில் ’சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `அனாமி'. இப்படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றில் உணவுகள் மீது உள்ள விருப்பத்தை பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்தப் பேட்டியில் "நான் முதல் முதலில் சென்னை வந்தது ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்புக்கு. அப்போது நான் சாப்பிட்ட நெய் தோசையும், பூரியும் மறக்கவே முடியாது. அவ்வளவு சுவையானதாக இருந்தது. சென்னை சாப்பாடுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். பணியாரம் கூட சென்னையில் வந்துதான் சாப்பிட்டேன். புரொடக்ஷனில் தரும் சாம்பார் சாதம், தயிர் சாதம் கூட பிடிக்கும். அசைவ உணவுகள் பெரிதாக சாப்பிட மாட்டேன். ஆனால் மற்றவை எல்லாம் விரும்பி சாப்பிடுவேன்.
இரண்டு மூன்று ஆண்டுகள் நான் மிகவும் குண்டாக இருந்தேன். இப்போது தான் எடை கொஞ்சம் குறைந்திருக்கிறேன். அதே சமயம், சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகள் பெரியதாக வைத்துக்கொள்ள மாட்டேன். சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிடுவேன். டயட் இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பேன், அப்போது சுவையான உணவை பார்த்தால் `இருப்பது ஒரு வாழ்க்கை இதை சாப்பிடாமல் என்ன செய்ய போகிறோம் என சாப்பிட்டு விடுவேன். இன்று பிரியாணி சாப்பிட வேண்டும் என தோன்றினால் சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் வேண்டுமா சாப்பிடுவேன். என்னால் எதை வேண்டுமானாலும் சமாளித்து கொள்ள முடியும். உணவை கட்டுப்படுத்த சொன்னால் ரொம்ப கஷ்டம்" எனக் கூறியுள்ளார் பாவனா.

