"தீனா படத்தை ட்ராப் செய்ய நினைத்தேன்..." - ஏ ஆர் முருகதாஸ்
முதல் படம் ‘தீனா’ படப்பிடிப்பு தொடங்கிய இரு நாட்களில் பல குழப்பங்களால் படத்தை நிறுத்த நினைத்த முருகதாஸ், அப்போது சசியை சந்தித்த அனுபவத்தை பகிர்கிறார். படம் விட்டு வெளியேறுவது ஒரு ஃபிளாப்புக்கு சமம், 70 சதவீதம் சாதித்தால் பார்வையாளர்கள் அதை 100 சதவீதமாக்குவார்கள் என்ற சசியின் வார்த்தைகள் அவரை மீண்டும் உற்சாகப்படுத்தி, ‘தீனா’வை தொடர முடிவு செய்ய வைத்ததாக அவர் உணர்ச்சியுடன் கூறுகிறார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிக்க, அஜய் நடித்துள்ள படம் `நூறு சாமி'. இப்படம் ஜூன் 19 வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், "சசி சார் எனக்கு முன்னாலேயே இயக்குநர் ஆகிவிட்டார். ஒரு நாள் ஏ வி எம்மில் அவரை சந்தித்த போது சசி நான் படம் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன் எனக் கூறினேன். வாழ்த்திவிட்டு சென்றவர் வண்டியை நிறுத்தினார். என்ன என்று அருகில் சென்றேன்.
வேலையை விட்டு இயக்குநர் வாய்ப்பு தேடுகிறாய், பசியோடு மட்டும் இருந்துவிடாதே. உனக்கு எப்போது என்ன தேவை என்றாலும் என்னை அணுகலாம், நான் பண உதவி செய்கிறேன் என்றார். நாம் உதவி கேட்கும் சூழல் வருகிறதோ, இல்லையோ ஆனால் நம்மை பசியோடு வாடவிடாமல் உதவ ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய தைரியம். அந்த சந்தோஷத்தை நான் கஷ்டப்படும் நேரத்தில் எனக்கு கொடுத்தார்.
இன்னொரு சம்பவம், என்னுடைய முதல் படம் தீனா துவங்கிய சமயத்தில் பல குழப்பங்கள் எனக்கு இருந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்தேன். ஆனாலும் மனதில் ஒரு குழப்பம் இருந்த சமயத்தில் எதேர்ச்சையாக சசியை பார்த்தேன். அவர் எனக்கு வாழ்த்து சொன்னார், நானோ படம் நடக்காது என்று விஷயத்தை சொன்னேன். அப்போது என்னை தனியாக அழைத்து சென்று `படம் வேண்டாம் என வெளியேறினால் அதுவே ஒரு ஃபிளாப்புக்கு சமம். நாம் நினைத்ததில் 70 சதவீதம் காட்சியில் வந்தால் போதும், பார்வையாளர்கள் அதனை 100 சதவீதம் ஆக்கிவிடுவார்கள் என நம்பிக்கை கொடுத்தார். மறுநாளில் இருந்த அந்தப் படத்தை நான் செய்யலாம் என முடிவெடுத்தேன். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன் சசி.

