சசி சாருக்காக பிரின்சிபாலை மிரட்டினேன்! - பா இரஞ்சித் சொன்ன சம்பவம் | Pa Ranjith | Sasi
சசி இயக்கிய ‘நூறு சாமி’ ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய பா. இரஞ்சித், சசி மீது கொண்ட நன்றியை பகிர்ந்தார். ஓவியக் கல்லூரி நாட்களில் ஒளிப்பதிவாளர் பிரசன்னாவுக்கு சீட் கிடைக்க பிரின்சிபாலை மிரட்டிய சம்பவத்தையும், அதனைத் தொடர்ந்து சசியை தொடர்பு கொண்டு உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் நடித்துள்ள படம் `நூறு சாமி'. இப்படம் ஜூன் 19 வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா இரஞ்சித் "நூறு சாமி படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதைவிட சசி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உதவி இயக்குநர் ஆக முயற்சித்த போது முதன் முதலில் என்னை ஒரு இயக்குநர் அவர் அறையில் அமர வைத்து பேசி, சில விஷயங்களை சொல்லி அனுப்பியது சசி சார் தான்.
நான் ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒளிப்பதிவாளர் பிரசன்னாவை கல்லூரியில் சேர்ப்பதற்காக வந்தார். அப்போது நான் கல்லூரியில் கொஞ்சம் திமிராக சுற்றிக் கொண்டிருந்தேன். நான் தான் அவரை பிரின்சிபால் அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். எனக்கு தெரிந்த சார் இது, இவருக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்றெல்லாம் பிரின்சிபாலை மிரட்டினேன். இதை வைத்து சாரிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்க அவரை தொடர்பு கொண்டேன்.
அலுவலகத்துக்கு வர சொன்னார், அங்கு போனதும், நான் ஓவியக்கல்லூரி மாணவன் என்பதால் டி ஷர்ட்டின் நிறம் என்ன எனக் கேட்டார். அப்போது எனக்கு அந்த பதில் தெரியவில்லை. இன்னொருவர் வந்ததால் என்னை வெளியே காத்திருக்க சொன்னார். பின்னர் நான் யோசித்து அந்த நிறத்தை கண்டுபிடித்துவிட்டேன். மீண்டும் உள்ளே போனதும் பதிலை சொன்னேன். கல்லூரியில் உன்னை பார்த்த போது ரௌடி மாதிரி இருந்தாய், ஆனால் நான் இப்போது கேட்ட கேள்விக்கு பதிலை யோசித்து சொல்லிவிட்டாய். உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் இப்போது என்னிடம் நீ வேலைக்கு சேர முடியாது என சொல்லி வேறு ஒரு இயக்குநரிடம் அனுப்பி வைத்தார். அவரிடமும் நான் சேரவில்லை. ஆனால் முதல் முறை உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்த ஒருவரை அவர் கையாண்ட விதம் எனக்கு பிடித்தது. நானும் அதை தான் என்னிடம் வாய்ப்பு கேட்பவர்களுக்கு செய்கிறேன்." என்றார்.

