'தலைவா'வுக்கும் பிரச்சனை, 'மக்கள் தலைவா'வுக்கும் பிரச்சனை! - ஆர் கே செல்வமணி | R K Selvamani
ராம் தேவ் இயக்கிய ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டில் பேசிய ஆர்.கே. செல்வமணி, ரவி மரியாவின் நட்பு, தாராள மனம், சங்கத்தில் செய்த நலத்திட்ட உதவிகளை பாராட்டினார். ட்ரெய்லர் சென்சார் சிக்கலால் திரையிடப்படாதது, பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘தலைவா’ போலவே இப்போதும் சென்சார் பிரச்சனை எழுந்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு எனப் பலரும் நடித்து ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மக்கள் தலைவா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர். கே. செல்வமணி, '' 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'தீர்த்தக் கரையினிலே' என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.
இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால் இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் 'மக்கள் தலைவா' படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.
ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. 'மக்களாட்சி' என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படத்தை செய்யலாமா...? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.
ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது. உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்... கற்பனையைப் பேசலாம் ...ஆபாசத்தை பேசலாம்... அருவெறுப்பை பேசலாம்... வன்முறையை பேசலாம்... கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்... ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான 'குற்ற பத்திரிக்கை'. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம். இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் 'மக்கள் தலைவா' படம் உருவாகி இருக்கிறது.

