"ஒருநாளும் நான் சாதியின் பக்கம் நிற்கமாட்டேன்!" - மாரி செல்வராஜ் | Mari Selvaraj
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிப் பாராட்டினார்.
அதன்பின்பு பேசிய மாரி செல்வராஜ், "என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றுதான், நான் என்ன மாதிரியான மனநிலையில், என்ன மாதிரியான அரசியல் பார்வையில், என்ன மாதிரியான தத்துவார்த்த பார்வையில் இயக்குகிறேன் எனப் புரிந்துகொண்டு என்னைப் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். நான் அம்பேத்கரியவாதி, நான் ஒரு மார்க்சியவாதி, நான் ஒரு பெரியாரியவாதி. எனக்கு இது மூன்றுதான் இலக்கு. நான் மானுடத்தைத்தான் பேசுவேன். சாதிய ஆதிக்கம் இருக்குமிடத்தில் நான் சாதிக்கு எதிரானவன் என்பதைச் சொல்லலாம். ஆனால் நம்மளுடைய இடத்திலேயே இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என்னிடம் வேறு எதையும் எதிர்பார்த்து வந்துவிடாதீர்கள், ஏமார்ந்து போவீர்கள். சாதி ஒழியுமா என எனக்குத் தெரியாது. ஆனால் சாதியை எதிர்த்தேன் என்ற பெயரோடே மாரி செல்வராஜ் செத்துப் போவான். எனவே நீங்கள் இப்படி கூடுவது, கோஷமிடுவது எல்லாம் சாதிக்கு எதிரானதாக இருந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.
நாம் பெரும்பாடுபட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இதற்குப் பிறகு பின்னோக்கி என்னால் போக முடியாது. எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. உலகத்தில் பல கதவுகளை நான் திறக்க வேண்டும். ஊரில், தெருவில் சண்டையிட எனக்கு நேரமில்லை. இந்த உலகத்தின் அங்கமாக நான் விரும்புகிறேன். அதனால்தான் ஒரு கலைவடிவத்தை கையில் எடுத்தேன். அதை பயன்படுத்தி ஏதாவது செய்ய முடியுமா என சிந்தித்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடக்கூடிய எல்லா தலைவர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சின்ன வயதில் இருந்து பார்த்த பல தலைவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு நான் போஸ்டர் ஒட்டி இருக்கிறேன். அவர்களுக்காக பல வேலைகள் செய்திருக்கிறேன். அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. என்னை நல்வழிப்படுத்தியதில் அந்த தலைவர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதுதான் என்னை சினிமாவுக்குள் நுழைய வைத்தது.
என் முதல் படத்திலேயே நான் யார் என சொல்லிவிட்டுத்தான் படம் எடுத்தேன். யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்தது கிடையாது. எனவே எனக்கு எதை பார்த்தும், யாரைப் பார்த்தும் பயம் கிடையாது. ஆனால் ஏதோ ஒரு அரசியல் காரணங்களுக்காக, என்னுடைய சமத்துவப் பார்வை மீது, அறத்தின் மீது கேள்விகளை எழுப்பினால், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் அறத்தின் பக்கம் நிற்பேனே தவிர, ஒரு நாளும் சாதியின் பக்கம் நிற்கமாட்டேன். ஒருவேளை, நான் அரசியலுக்கு வந்து ஈடுபட்டால், ஏதேனும் ஓர் அமைப்பைத் தொடங்கினால் அப்போதும்கூட சாதிச் சமூகத்திற்கு எதிராகச் செயல்படுபவனே ஒழிய, எனது சமூகத்தைக் காட்ட வேண்டிய கடமை இருந்தாலும்கூட மானுட சமூகத்தின் மீது பேரன்பை நிலைநாட்டுவதுதான் முக்கியம். என்னை அந்தப் பக்கம் இழுக்கலாம் என ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள்" என்றார்.

