"என் வாழ்க்கையில் தனுஷ் சார் மிக முக்கியமானவர், அவரை பிரிந்தது..." - விக்னேஷ் சிவன் சொன்ன ரகசியம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `LIK' ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வருகிறார் விக்னேஷ் சிவன். அப்படி ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி கேட்கப்பட, அதற்கு பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். அதில் "தனுஷ் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை என் வாழ்க்கையில் மிகப்பெரிதாக பார்க்கிறேன். அவரின் பிறந்தநாள் ஜூலை 28. என் அப்பா இறந்த நாளும் ஜூலை 28. அவருக்குள் எப்போதும் என்னுடைய அப்பாவை தான் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு அன்பு எனக்கு அவர் மேல் இருக்கிறது. சிலருடன் ஏன் நமக்கு சில விஷயங்கள் பிரச்சனையாகிறது எனவே தெரியாத சூழல் உருவாகும். அதனை நான் பெரிய இழப்பாக நினைக்கிறேன். நல்ல உறவில் இருப்பவரை இழக்கிறோம் என்றால், அதை அவமானகரமாகவும் நினைக்கிறேன். எதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது.
இன்று நான் இங்கு இருக்கிறேன், எனக்கு என்று வாழ்க்கை இருக்கிறது என்றால் அதற்கு நூறு சதவீதம் தனுஷ் சார் முக்கியமான காரணம். VIP படத்தில் பணியாற்றிய போது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அவர் கூடவே தான் இருந்தேன். அவர் சாப்பிட்ட பின்னர்தான் நான் சாப்பிடுவேன் என்ற அளவு இருந்த காலம். VIP படம் இங்கே திரையாகும் போது, அவர் ஷமிதாப் பட ஷூட்டிங்கில் இருந்தார். இங்கு படம் மிகப்பெரிய ஹிட். ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து சாருக்கு நான் போன் செய்து இங்கு கிடைக்கும் வரவேற்பை கூறினேன். இப்படி பல நினைவுகள் அவருடன் எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அது எல்லாமே கண்ணா பின்னாவென ஆகிவிட்டது.
என் வாழ்க்கையில் எதை நினைத்தாவது வருந்துகிறேன் என்றால், இந்த உறவை இழந்ததை வருத்தமாகவும், துரதிர்ஷ்டமானதாகவும் நினைப்பேன். சரியான காரணம் இருந்து இருவர் பிரிந்தால், அதனை நம்மால் தீர்க்க முடியும். பிரச்சனையே இல்லாமல் இருவர் பிரிந்தால் அதனை எப்படி சரி செய்ய முடியும்? ஆனால் அவரை போல வேலை செய்ய இன்னொருவர் பிறந்ததுதான் வர வேண்டும். அவர் கடினமாக உழைப்பதை பார்த்து, அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்திருக்கிறேன்.
4- 5 மணிவரை உட்கார்ந்து வேலை செய்வார். 5 மணிக்கு படுக்கையில் 6.30 மணிக்கு எழுப்ப சொல்லிவிட்டு படுப்பார். பின்னர் அவரே 6.30க்கு எழுந்து என்னை எழுப்புவார். அவர் நம்பரை நான் மிடாஸ் என்று தான் பதிவு செய்திருந்தேன் என் போனில். அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். ஆனால் ஒருகட்டத்தில் அவரை சுற்றியுள்ள ஆட்கள் மாறும் போது அவரது எண்ணங்களும் மாறிவிட்டது போல. ஆனால் அவர் மேல் எனக்கு உள்ள அன்போ, மரியாதையோ, நன்றியோ என்றுமே மாறாது. அது என் கடைசி மூச்சு வரை இருக்கும். ஆனால் இதில் ஒருபோதும் குற்ற உணர்ச்சி எனக்கு இல்லை. தப்பு செய்தால் தான் குற்றவுணர்ச்சி இருக்கும்." எனக் குறிப்பிட்டார் விக்னேஷ் சிவன்.

