முதல்வர் விஜயின் ஆட்சி, 'முதல்வன்' படம் பார்ப்பதுபோல் உள்ளது - சஞ்சீவ் | CM Vijay | Sanjeev
சென்னையில் உள்ள தனியார் சமையற்கலை கல்லூரியில் முதலமைச்சர் விஜயின் வாழ்க்கைp பயணம் பழ சிற்பமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல்வரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் கலந்துகொண்டு பேசியபோது, "நம்முடைய முதலமைச்சர் நாயகன் முதல் ஜனநாயகன் வரை என இளைய தளபதி முதல் முதலமைச்சர் வரையான விஜய் அவர்களின் பயணத்தை சிற்பமாக செதுக்கி இருக்கிறார்கள். என் நண்பர் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சி. 35 வருட நட்பில் என்ன எல்லாம் பேசினோம் என்பது எனக்கு தெரியும். அதில் முதலமைச்சர் என்பது இல்லை. அது அவராக இந்த மக்களுக்கு செய்ய நினைத்து ஆனது. வந்த பத்து நாட்களிலேயே எவ்வளவு நல்லது செய்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முதல்வன் படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது.
விஜய் முதல்வர் ஆனதுக்குப் பிறகு கோட் அணிந்து வருகிறாரே, என்ன காரணம்?
"அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இதுவரை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு CM அப்படி வந்திருக்கிறார்களா? அவர் வருகிறார் அவ்வளவுதான்."
உங்கள் நண்பர் ஸ்ரீநாத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் நிற்கவில்லை என்பதில் வருத்தம் இருக்கிறதா?
"நான் அதைக் கேட்டதில்லை, எனக்கு அந்தப் பக்கம் விருப்பமும் இல்லை. நம்ம வேலையை நாம் பார்ப்போம், அவர் வேலையை அவர் பார்ப்பார். ஸ்ரீநாத்துக்கு இதில் ஆர்வம் உண்டு. அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர், அந்த மண்ணின் மைந்தர். மேலும் ஸ்ரீநாத்தே ஆரம்பத்தில் வேறு ஒருவருக்குத்தான் கேட்டார். பின்னர் அந்த வாய்ப்பு அவருக்கே வந்தது. இப்போது வென்றிருக்கிறார்."
திருச்சி கிழக்கு அல்லது ராஜ்யசபா MP பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?
"அது அந்தச் சூழலைப் பொறுத்து. நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதையே சிந்திக்கிறேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. அந்த நேரம் வரும்போது பார்க்கலாம்."
இனி விஜய் செல்ல முடியாத நிகழ்வுகளுக்கு நீங்கள் போவீர்களா?
"எங்கள் 35 வருட நட்பை முடித்து விடுவீர்கள்போல இருக்கிறதே. அவருக்கு மாற்றாக எல்லாம் செல்ல முடியாது. என்னை அழைத்தால் போவேன்."
இப்போது நண்பனாக இல்லாமல் தமிழ்நாட்டு பிரஜையாக பேசுகிறேன். ஒவ்வொரு நாளும் செய்தியைப் போடும்போது ரேஸ் பார்ப்பதுபோல இருக்கிறது. பல அதிரடி மாற்றங்கள். ஒவ்வொரு முதல்வரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். எப்படி சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தாரோ, தடைகளை உடைத்து வந்தாரோ அதுபோலதான் இங்கும். அங்கே சாதிக்க தெரிந்தவருக்கு இங்கு சாதிக்க தெரியாதா? இங்கே எதிர்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதைச் சமாளித்து வருவார் என நான் நம்புகிறேன். ஒரு தமிழ்நாட்டு பிரஜையாக அவருக்கு வாக்களித்த நபராக அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பு என்னுடையது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவருடையது. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக 200 சதவீதம் ஆட்சி நடத்துவார். அதை நிறைவேற்ற வேண்டியது அவருடைய கடமை, அதை அவர் செய்வார். இன்னும் கொஞ்சநாளில் தமிழ்நாடு, சிங்கப்பூர் மாதிரி மாறினால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த மாதிரி தொலைநோக்கு பார்வையிலான தமிழ்நாட்டை நான் பார்க்கிறேன்" என்றார்

