பசுபதி
பசுபதி Sarpatta Parambarai

வெள்ளை வேட்டி, ஜிப்பா, முறுக்கு மீசை, கூர்மையான பார்வை - 'ரங்கன் வாத்தியார்' என்னும் அபூர்வம்..!

இவங்க இல்லைன்னா இந்தப் படம் இல்ல..! - சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய சினிமா தொடர்..

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் பசுபதி. கூத்துப் பட்டறை நாடகக்குழுவில் தயாரானவர். 'மருதநாயகம் ' படம் மூலம் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியிருக்க வேண்டியவர். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவர், பிறகு குணச்சித்திர பாத்திரங்களிலும் பிரகாசித்தார். சீரியஸான ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த இவரை காமெடி ஏரியாவிலும் பயன்படுத்தினார் கமல். (மும்பை எக்ஸ்பிரஸ்). பசுபதி சிறப்பாக நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமானது ‘ரங்கன் வாத்தியார்’.

பசுபதி
'அவள் அப்படித்தான்' தியாகு நினைவில் இருக்கிறாரா..! - சுரேஷ் கண்ணன்

2021-ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கும் விருதுகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக ‘Best Supporting Actor’ பிரிவில் ‘ரங்கன் வாத்தியார்’ கெலித்திருப்பதற்கான சாத்தியம் அதிகமிருந்தது. அப்படியொரு வலிமையான பாத்திரத்தை பசுபதி கையாண்டிருந்தார்.

ரங்கன் வாத்தியார் ஒரு நல்ல ஆசானுக்கான அத்தனை குணாதிசயங்களையும் கொண்டிருப்பவர். குத்துச் சண்டை போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதை விடவும் இப்படித்தான் வெற்றி பெற வேண்டும் என்கிற அறவுணர்வைக் கொண்டவர். தன்னுடைய மகனாகவே இருந்தாலும் முக்கியமான போட்டியாளரை எதிர்கொள்ள அவனுக்கு ‘டெக்னிக்’ போதாது என்று கறாராக நிராகரிக்கும் அளவிற்கு நேர்மையாளர். இதற்காக மகனிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் பல அழுத்தங்களை எதிர்கொண்டாலும் அவர் தடுமாறுவதில்லை.

பசுபதி
பசுபதிSarpatta Parambarai

ஒரு நல்ல ஆட்டக்காரனை உடனே கண்டுகொள்ளும் திறன் படைத்தவர். தான் எடுக்கும் முடிவை உறுதியுடன் செயல்படுத்தக்கூடியவர். ஒரு காலத்தில் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்ட குத்துச் சண்டை வீரர். தன்னுடைய பரம்பரைக்காக தொடர் விசுவாசத்துடன் செயல்படுபவர். குத்துச் சண்டை ஆட்டத்தில் வெல்வதற்கு கோபமும் வெறியும் தேவையில்லை, ஆட்ட நுணுக்கமும் நிதானமும் அதிகமாக தேவை என்று கருதுபவர். உடல் பலத்திற்கு மேலாக மனபலம் முக்கியம் என்பதை உபதேசிப்பவர்.

ஒரு சிறந்த ஆட்டக்காரன் எவ்வித தீய பழக்கமும் இல்லாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது ரங்கன் வாத்தியார் சொல்லும் அடிப்படையான உபதேசம். குறிப்பாக உடல்பலம் தரும் திமிர் காரணமாக யாராவது அடிதடி அல்லது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபரை குழுவிலிருந்து உடனே வெளியேற்றி விடுவார். ‘கத்தி எடுப்பவனுக்கு குத்துச் சண்டை வராது’ என்பது அவரது அழுத்தமான அபிப்ராயம். ஒரு நல்ல குருவிற்கான அடையாளம் இது.

பசுபதி ஆர்யா
பசுபதி ஆர்யாSarpatta Parambarai

இதர பிரிவுகளில் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வென்றாலும் மெயின் போர்டு எனப்படும் முக்கியமான ஆட்டத்தில் அந்தக் குழு தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. துரைக்கண்ணு ஆசானாக இருக்கும் இடியப்ப நாயக்கர் பரம்பரை இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக வேம்புலி என்னும் மெயின் போர்டு ஆட்டக்காரனிடம் சார்பட்டா குழு தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதால் அது சார்ந்த நெருக்கடி ரங்கன் வாத்தியாருக்கு ஏற்படுகிறது. தனது பரம்பரையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார்.

எப்போதும் இறுக்கமான முகத்துடன் சிடுசிடுவென்று எரிந்து விழுபவராகவே படம் முழுவதும் வருகிறார் பசுபதி. இவர் வாய் திறந்து புன்னகைப்பது ஒரேயொரு காட்சியில்தான். அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதால் எமர்ஜென்சி சமயத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்கள் கழித்து வெளியே வருவார். வீட்டின் மனைவியின் கையால் சாப்பிடும் போது, அவரது மனைவி கணவனின் காலை பாசத்துடன் வருடி விடுவார். இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியார் புன்னகைப்பது. இந்த ஒரு காட்சியில் மட்டும்தான். மனைவியின் கையால் ‘நாக்அவுட்’ ஆகி விழும் காட்சி என்றும் சொல்லலாம்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பசுபதியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த வீரன் மீரான். ரங்கன் வாத்தியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். வேம்புலிக்கு எதிராக அவனை களத்தில் இறக்குவார், வாத்தியார். ‘வேம்புலி அப்படி அடிப்பான். நீ லெஃப்ட்ல அடி..’ என்று மற்றவர்கள் ஆளாளுக்கு கண்டபடி உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் ரங்கன், அவர்களைத் தடுத்தி நிறுத்தி ‘மீரான்.. உன் ஆட்டத்தை நீ ஆடு’ என்று தட்டிக் கொடுத்து அனுப்புவார். களத்தில் மற்றவர்கள் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும் இருக்கும் போது அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பவர் ரங்கன் மட்டுமே. அது மட்டுமல்லாமல் வென்றவர்கள் கேலி செய்யும் போது இவர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள் கொதித்துப் போய் பதிலுக்குப் பேசும் போது ‘கெலிச்சவன்.. அப்படித்தான் பேசுவான்... நீ அடுத்த ஆட்டத்துல பதில் சொல்லு’ என்று அவர்களை அழைத்துக் கொண்டு செல்வார்.

வடசென்னையின் அசலான மொழியின் துல்லியமான உச்சரிப்பு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பதிவாகவில்லை. ‘மெட்ராஸ் பாஷை’ என்று சோ, கிரேசி மோகன், கமல் போன்றவர்களால் பேசப்பட்டதெல்லாம் மிகையான பாவனை மட்டுமே. இந்தக் குறையை ‘சார்பட்டா பரம்பரை’ போக்கியிருக்கிறது. இந்தப் படத்தில் ஏறத்தாழ அனைவருமே அந்த வழக்கின் தன்மையோடு வசனம் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக பசுபதியின் உடல்மொழியும் உச்சரிப்பும் அருமையாக இருக்கும். ஓர் அரசியல் பிரமுகருக்கான உடல்மொழி மேடையில் பேசும் போது பசுபதியிடம் சரியாக வெளிப்பட்டிருக்கும். போலவே பயிற்சியின் போது ஒரு ஆசானுக்கான கறார்த்தனத்தை அருமையாக வெளிப்படுத்துவார்.

பசுபதி ஆர்யா ஜான் விஜய்
பசுபதி ஆர்யா ஜான் விஜய்Sarpatta Parambarai

ஏகலைவன் போல ரங்கன் வாத்தியாரின் திறமையை தூரத்திலிருந்தே பரவசத்துடன் கவனித்துக் கொண்டிருப்பான் கபிலன். (ஆர்யா). அவரைப் பற்றி யார் குறை சொன்னாலும் அவனுக்குப் பிடிக்காது. குத்துச் சண்டையின் மீது அந்தப் பகுதியின் இளைஞர்களுக்கு ஆர்வமும் மரியாதையும் வருவதற்கு அவர்தான் காரணம் என்பது கபிலனின் அபிப்ராயம். எதிரணியினர் கூட ‘வாத்தியாரே’ என்று கூப்பிடுமளவிற்கு ரங்கன் மரியாதையை சம்பாதித்து வைத்திருப்பார். கபிலனின் தந்தையும் ஒரு பிரபல குத்துச்சண்டை வீரர்தான். ஆனால் அவர் தவறான வழியில் சென்று விட்டதால் கபிலனும் அவ்வாறாக மாறி விடக்கூடாது என்று அவனது தாய் அச்சப்படுவார். எனவே குத்துச்சண்டை மேடை பக்கமே மகன் செல்லக்கூடாது என்று அடிப்பார். ஆனால் அதையும் மீறி சுயஆர்வம் காரணமாக அந்தப் பக்கமே சுற்றிக் கொண்டிருப்பான், கபிலன்.

கபிலனின் தாய் செய்யும் கடுமையான ஆட்சேபம் காரணமாக அவனை அடிக்கடி துரத்திக் கொண்டேயிருப்பார் ரங்கன். ஆனால் ஒரு தற்செயலான நேரத்தில் ராமனுக்கும் கபிலனுக்குமான ஆவேசமான போட்டி நடக்கும். தன்னுடைய வாத்தியார் அவமானப்படுவதைக் காணச் சகிக்காமல் தானாகவே களத்தில் இறங்குவான் கபிலன். அங்குதான் கபிலனின் அசாதாரணமான திறமையை ரங்கன் கவனிப்பார். இந்தக் காட்சியில் பசுபதியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். ஆர்வமாக இருக்கும் தன்னுடைய மகனை ஓரமாக தள்ளி விட்டு வேம்புலிக்கு எதிராக சண்டை செய்வதற்காக கபிலனை இறக்குவார். ‘ஸ்டேஜே ஏறாத பில்லக்கா பையனோட சண்டை செய்யச் சொல்றியே.. நியாயமா இது? என்று துரைக்கண்ணு கேட்கும் போது ‘தொரை.. என்னை நம்பு. ஆட்டம்ன்னா இன்னான்னு பார்ப்பே. அவன் மேல எனக்கு அவ்ள நம்பிக்கை இருக்கு. ஒரே ஆட்டத்துல ஒருத்தனைப் பத்தி தெரிஞ்சுடும்’ என்று பொதுச்சபையில் உறுதியுடன் சொல்வார்.

பொதுவில் சொல்லி விட்டாலும் கபிலனுக்கு மிகையான தன்னம்பிக்கையை ரங்கன் ஊட்டுவதில்லை. ‘நீ ராமனை வேணா அடிச்சிருக்கலாம். ஆனா டான்ஸிங் ரோஸை அவ்ள ஈஸியா அடிக்க முடியாது. நல்ல ஆட்டக்காரன்பா’ என்று யதார்த்த நிலைமையைச் சொல்லும் ரங்கன், குத்துச்சண்டையில் கால் அசைவுகள் எத்தனை முக்கியமானது என்பதை விளக்குவார். போட்டி நடக்கவிருக்கும் நாளின் முன்னிரவில் சார்பட்டா பரம்பரையின் பின்னணியையும் இந்த வெற்றி எத்தனை முக்கியமானது என்பதையும் கபிலனுக்கு ரங்கன் விளக்கும் காட்சி அருமையானது. ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் பசுபதியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். கபிலன் ரோஸை வென்ற பிறகு சட்டையின் கைப்பகுதியை மடித்துக் கொண்டு மேடையின் நடுவே வெற்றிப் பெருமிதத்துடன் வந்து நிற்பார் ரங்கன்.

கபிலன் மீதுள்ள பொறாமை காரணமாக தன்னுடைய மகன் தவறு செய்ததை அறியும் ரங்கன் அவன் மீது கோபம் கொண்டு அடிக்கச் செல்லும் காட்சியிலும் பசுபதியின் நடிப்பு சிறப்பு. ‘வேம்புலி கூட ஜதை போடற அளவிற்கு உன் கிட்ட டெக்னிக் இல்லடா. இருந்திருந்தா நானே ஸ்டேஜ் ஏத்தியிருக்க மாட்டேனா?’ என்று வெடிப்பார். தான் சிறைக்குச் சென்ற இடைவெளியில் கபிலனின் பாதை மாறி விட்டதை அறிந்து கோபமும் வருத்தமும் அடைவார். “கத்திய தூக்கினவனுக்கு பாக்ஸிங் வராது” என்று பயிற்சியளிக்க மறுத்து விடுவார்.

தன்னுடைய தவறை உணரும் கபிலன், இன்னொரு வாத்தியாரிடம் கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டு இறுதிக்கட்டத்தில் வேம்புலியுடன் மோதுவான். கபிலனின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவன் தோற்று விடுவதற்கான நிலைமை ஏற்படும். அப்போது தன்னிச்சையான பாசத்துடன் மேடையில் ஏறும் ரங்கன் “டேய்.. ஒண்ணுமில்ல.. எழுந்திரு.. ஜெயிச்சுட்டு வா.’ என்று தரும் ஊக்கமானது கபிலனுக்கு யானை பலத்தை மீட்டுத் தரும். போட்டியில் வெல்வான். தன்னுடைய பரம்பரையின் மானம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் மேடையின் மீது பெருமிதமாக நிற்பார், ரங்கன் வாத்தியார்.

வெள்ளை வேட்டி, ஜிப்பா, முறுக்கு மீசை, கூர்மையான பார்வை என்று படம் முழுவதும் கம்பீரமான தோற்றத்தில் வரும் பசுபதி, ஒரு நல்ல ஆசானுக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருப்பார். தமிழ் சினிமா பார்வையாளர்கள் மறக்கவே முடியாத பாத்திரங்களில் ஒன்று ‘ரங்கன் வாத்தியார்’.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com