மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | 'சவடால்' வைத்தி... மறக்க முடியுமா..? ஏன்னா அதான் நாகேஷ்..!

இந்த நாவலையும் பாத்திரத்தையும் உருவாக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரே நடிக்கவும் எண்ணியிருக்கிறார் என்றால் அதை எப்படியெல்லாம் அணுஅணுவாக ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்? அதில் இன்னொரு நடிகர் அசத்தி விட்டார் என்று ஒரு கதாசிரியரே சொல்வது ...
நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

(தொடரின் பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள், ஒரு கிளாசிக் தமிழ் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. மக்களின் நினைவில் தொலைந்து போய்க் கொண்டிருந்த பரதநாட்டியம், நாதஸ்வரம் ஆகிய இரண்டு தொன்மையான கலைவடிவங்களை ஜனரஞ்சகமான முறையில் திரைப்படத்தின் வழியாக வெகுசனத்திற்கு கொண்டு சேர்த்து நினைவுப்படுத்திய படம். ஆனந்த விகடன் இதழில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தொடர்கதையை ஏ.பி.நாகராஜன் சிறப்பான முறையில் இயக்கி வெற்றிப்படமாக்கினார்.

சிவாஜி கணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா, மனோரமா என்று பல நடிப்புலக ஜாம்பவான்கள் இந்தப் படத்தில் இருந்தாலும் அசாதாரணமான நடிப்பால் தன்னுடைய பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கினார் நாகேஷ். அவர் ஏற்ற நகைச்சுவைப் பாத்திரங்களின் பெஸ்ட் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் தரவரிசையில் ‘வைத்தி’ பாத்திரம் உறுதியாக இடம்பெறும். ஆம், ‘சவடால் வைத்தி’ என்கிற இந்தப் பாத்திரத்தில் நாகேஷ் செய்த அட்டகாசமான நகைச்சுவை, பல காமெடி நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் நகலெடுக்க கூட இயலாத அளவிற்கு சிறப்பாகவும் இருந்தது.

பரதநாட்டியம் தேவதாசிகளிடமிருந்து கிளைத்த ஒரு கலைவடிவம். இறைவனுக்காக தங்களை அர்ப்பணித்து நடனம் ஆடிய தேவதாசிகள் மக்களால் மதிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அந்நிய படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்களின் கலைமதிப்பு அழிந்து ஜமீன்தார்கள், மிட்டா, மிராசுதார்கள் போன்ற செல்வந்தர்களின் பாலியல் இச்சைகளுக்கான வடிகால்களாக அவர்கள் மாற்றப்பட்ட அவலம் நடந்தது.

பெண் நடனக்கலைஞர் என்றாலே நடனமாடுவதைத் தாண்டி அவர்கள் ஆசை நாயகிகளாகவும் பாலியல் தொழிலாளிகளாகவும் இருப்பார்கள் என்பது பொதுவான சமூகநடைமுறையாக கருதப்பட்டது. இதிலிருந்து விதிவிலக்காக பலர் இருந்தாலும் சமூகத்தின் பொதுப்புத்தி தேவதாசி என்பதன் அடையாளத்தை விகாரமாக பார்த்தது. இப்படியான நடனக்கலைஞர்களை செல்வந்தர்களிடம் அறிமுகப்படுத்தி அழைத்துச் செல்லும் தொழிலை சிலர் செய்தார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாகேஷ் ஏற்றிருந்த ‘வைத்தி’ பாத்திரம் இப்படிப்பட்டது. உடைத்து பச்சையாகச் சொன்னால் ‘பிம்ப்’ கேரக்ட்டர். ஆனால் இதை விரசமே இல்லாமல் ரசிக்கத்தக்க அளவில் கையாண்டதை நாகேஷின் மேதமைத்தனம் எனலாம்.

பட்டு வேட்டி மற்றும் சட்டை, கழுத்தில் மணிமாலை, நெற்றியில் குங்குமம், கோல்டுபிரேம் கண்ணாடி, படிய வாரிய தலை என்று பக்காவான இடைத்தரகர் தோற்றத்தில் வருவார் நாகேஷ். எளிய நபர்களை எடுத்தவுடனே ஏகவசனத்தில் அலட்டலாக அழைப்பது இவரது பாணி. இதுவொரு உளவியல் உத்தி. இதன் மூலம் தன்னை உயர்த்திக் கொண்டு அழைக்கப்படுபவரை தாழ்வுணர்வுடன் உணரச் செய்யும் டெக்னிக். இந்தச் சவடால் பல இடங்களில் இவருக்குப் பயன்படும். சில இடங்களில் செல்லாது.

ஓர் உதாரணக்காட்சியைப் பார்க்கலாம். ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக செல்வார் நாகேஷ். வாசலில் நிற்பவர் ‘டிக்கெட் எங்க?” என்று கேட்டவுடன் அவரை உப்புப் பெறாத ஆசாமியாக நினைத்து ஒரு பார்வை பார்க்கும் நாகேஷ் “ஏம்ப்பா.. ஆளு தராதரம் தெரிய வேணாம்.. பார்த்தவுடனே தெரிய வேணாம்.. நான் மகாராஜாவோட வந்திருக்கேன்” என்றவுடன் அந்த ஆசாமி பயந்து விடுவார். அதைப் பற்றிக் கொள்ளும் நாகேஷ், என்னமோ அவர்தான் அந்த நிகழ்ச்சியை நடத்துவது போல ‘ஏற்பாடுல்லாம் சரியா நடக்குதா.. பூ.. பழம்லாம் வேணுமே.. இல்லையா.. தெரியுமே.. போ.. போ... அதைக் கவனி’ என்று எகத்தாளமாகச் சொன்னவுடன் டிக்கெட் ஆசாமி பதறி விலக முற்பட, அவரைத் தடுக்கும் வைத்தி “என்னை கேட்ல மடக்கினதை வெளில சொல்லிடாத.. உனக்குத்தான் வேலை போயிடும்.. போ’ என்று சொல்லும் அழகே தனி. அப்போது நாகேஷ் தரும் எக்ஸ்பிரஷனைக் கவனிக்க வேண்டும். “ஹப்பாடா!.. ஏமாந்துட்டான்..’ என்பதை ஒரு மெல்லிய அசைவிலேயே தெரிவித்து விட்டு கெத்தாக உள்ளே செல்வார்.

நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

வைத்தியி்ன் ரகளைக் காட்சி இன்னமும் முடியவில்லை. முன்வரிசையில் யாருக்காகவோ ரிசர்வ் செய்திருக்கும் சேரில் சென்று பந்தாவாக அமர்ந்து கொள்வார். பக்கத்தில் இருப்பவர் ‘இது கிருஷ்ணமூர்த்திக்கு ரிசர்வ் செஞ்சிருக்கு’ என்று சொன்னவுடன் ‘ஷட் அப்.. நான்தான் கிருஷ்ணமூர்த்தி’ என்று கூலாகச் சொல்லி விட்டு கண்ணாடியை உயர்த்திக் கொள்வார். ஒரிஜினல் கிருஷ்ணமூர்த்தி அப்போது வந்து இருக்கையைக் கேட்க “நீங்க உக்காருங்கோ.. என் குழந்த ஆடறத நான் எங்கே இருந்து பார்த்தா என்ன?’ என்று குழைந்தபடி உடல் மடங்கி கீழே அமர்வார். இதுதான் வைத்தி. அவரது லீலையின் ஒரு பகுதி மட்டும்தான் இது. பிற்காலத்தில் வந்த ‘கைப்புள்ள’களுக்கு முன்னோடி நாகேஷ்தான்.

வைத்தியின் இந்த எகத்தாளமெல்லாம் எளிய மனிதர்களிடம்தான். செல்வந்தர்களைப் பார்த்தால் வேறாருவராக மாறி விடுவார். எந்தவொரு பெரிய மனிதரைப் பார்த்தாலும் சட்டென்று இடுப்பை பின்பக்கம் வளைத்து வேட்டி மடிப்பிலிருந்து எலுமிச்சம் பழத்தை எடுத்துத் தருவது வைத்தியின் ஸ்டைலைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. “இந்த லோகத்துல இந்த வைத்தி இல்லைன்னா.. நல்லதும் நடக்காது.. கெட்டதும் நடக்காது’ என்பது அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் அறிமுக வாசகம்.

நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

நாதஸ்வர சக்ரவர்த்தியான சிவாஜியை ஊரே மதித்து வணங்கும். அவருடைய ஊர் பெயரோடு ‘சிக்கல் சண்முகசுந்தரம்’ என்று அழைக்கும். ஆனால் சிவாஜிக்கு அதிக சிக்கலைத் தருவதே நம்முடைய வைத்திதான். சிவாஜி பெரிய கலைஞராக இருந்தாலும் அவரை உரிமையோடு ‘ஏம்ப்பா.. சண்முகசுந்தரம்’ என்றுதான் அழைப்பார்.

பெரிய மனிதர்களிடம் குழைவு, எளிய மனிதர்களிடம் வெற்று அதிகாரம் என்று வைத்தியின் ராஜாங்கம் நடந்தாலும், அப்பேர்ப்பட்ட வைத்தியே சற்று ஒடுங்கி நடப்பது தவில் வித்வானிடம்தான். அவர் தோளைப் பிடித்து பலமாக உலுக்கும் போது வைத்திக்கு சப்தநாடியும் ஒடுங்கி விடும். ‘தவில் அடிக்கற கைல்ல.. அதான் நல்ல பலம்’ என்று வைத்தியே காரணம் சொல்லிக் கொள்வார். ‘நரம்புப் பய.. எலும்புப் பய.. சுவரொட்டி’ என்று விதம் விதமான வார்த்தைகளால் வைத்தியை வசைவார் தவில். என்றாலும் அவரிடமே “ஏம்ப்பா.. முத்துராசு..’ என்று சமயத்தில் ஏகவசனத்தில் அழைத்து எரிச்சலாக்கிய பிறகு சட்டென்று நழுவி விடுவதில் வைத்தி சமர்த்தர். தவில் வித்வானாக டி.எஸ்.பாலையாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

பரதம் ஆடும் மோகனாம்பாள் சிறந்த அழகி என்பதால் அவர் மீது பல பெரிய மனிதர்களுக்கு கண். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் வைத்தி. இவருடைய வலையில் முதலில் விழுவது சிங்கபுரம் மைனர். மோகனாம்பாளின் அழகைப் பற்றி வைத்தி விவரித்தவுடன் வெட்கமும் ஆசையும் மைனரின் முகத்தில் பெருகியோடும். அவர் சென்ற பிறகு ‘சிங்கபுரம் மைனர் வசமா மாட்டிண்டுண்டான்’ என்று வைத்தி புளகாங்கிதம் அடைவார். இன்னொரு காட்சியில் நாதஸ்வரக் கச்சேரி நடக்காமல் இருக்க “நீதான் இடைஞ்சல் பண்ணணும்” என்று மைனர் சொன்னவுடன் “இடைஞ்சல்தானே.. அதையெல்லாம் பேஷா பண்ணுவேன்” என்று வைத்தி சொல்லும் போது சிரிப்பு வராமல் இருக்காது.

நாகேஷ்
'அவள் அப்படித்தான்' தியாகு நினைவில் இருக்கிறாரா..! - சுரேஷ் கண்ணன்

ஒருவரிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் அவரிடம் உரிமையாக விசாரித்து ஒட்டிக் கொள்வது வைத்தியின் ஸ்டைல். மோகனாம்பாளின் தாயான வடிவுடையாம்பாளை வைத்தி முதன் முதலில் சந்திப்பது ரகளையான காட்சி. “என்ன.. வடிவு எப்படியிருக்க?’ என்று உரிமையோடு வீட்டுக்குள் வைத்தி நுழைய “யாருய்யா நீ?” என்று வடிவு எரிச்சலோடு கேட்க “என்னைத் தெரியலையா.. இந்த வைத்தியை மறந்துட்டியா?’ என்று நீண்டகாலம் பழகியவரைப் போல பேசத் துவங்கும் வைத்தி ‘சிங்கபுரம் மைனர்’ பெயரைச் சொன்னவுடன் பணத்தாசை பிடித்த வடிவின் கண்கள் விரியும். உடனே அதைச் சரியாகப் பற்றிக் கொண்டு தன்னுடைய வெற்றிக் கொடியை பலமாக ஆட்டத் துவங்கி விடுவார். “இவ்ளோ பெரிய கழுத்து வெச்சுண்டு இத்தூணுன்டு நகைதான் போட்டிருக்கே” என்று வடிவாம்பாளை செல்லம் கொஞ்சம் காட்சி பார்ப்பதற்கே கனஜோராக இருக்கும்.

நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

இதைப் போலவே சிங்கபுரம் மைனரை, மோகனாவின் வீட்டிற்கு வைத்தி அழைத்துச் செல்லும் காட்சியும் கலாட்டாவாக இருக்கும். தயக்கமும் வெட்கமுமாக வண்டியில் இருந்து இறங்கும் மைனரிடம் “ஏன் இப்பவே தலையைக் குனிஞ்சுண்டீர்.. .. வெளில வரும் போதுதான் தலையைக் குனியணும்கானும்..” என்று வைத்தி அடிக்கும் கிண்டல் சுவாரசியமானது. “மைனரா.. வாங்க.. வாங்க.. ஏன் நிக்கறீங்க.. நீங்க நின்னா எனக்கு கால் வலிக்குதே” என்று வடிவு மிகையாக உபச்சாரம் செய்ய “பார்த்தீங்களா.. நீங்க நின்னா வடிவுக்கு கால் வலிக்குதாம்.. உங்களுக்கு பசிச்சா.. அவ சாப்பிட்றப் போறா.. வாங்கோ.. வந்துடுங்கோ” என்று உள்ளே அழைத்துச் செல்வார் வைத்தி.

வடிவாம்பாளும் வைத்தியும் இணைந்து தோன்றும் காட்சியில் எல்லாம் நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கும். அந்த அளவிற்கு கிண்டலடித்து தீர்ப்பார். வடிவு சாமர்த்தியாகப் பேசுவதைப் பார்த்து ‘அய்யோ.. வடிவு.. வடிவு.. அஞ்சு கண்டத்தையும் ஆள வேண்டிய நீ.. எவ்வளவு பெரிய நெத்தி.. அதில் எவ்ள பெரிய பொட்டு” என்று சொல்லும் வைத்தி உடனே மாடுலேஷனை மாற்றி ‘அது சரி.. இடம் இருக்கு. வெச்சுக்கற’ என்று சொல்வது சிறப்பான நகைச்சுவை. பெரிய மனிதர்களிடம் வைத்தி திறமையாக பணம் கறந்தாலும் வடிவிடம் மட்டும் அந்த பாச்சா செல்லுபடியாகாது. ‘பணம் கொண்டு வரலையே’ என்று வடிவு தப்பிக்க “என்னிக்கு கொண்டு வந்தே’ என்று துண்டை உதறியபடியே சலிப்புடன் நடந்து செல்வார் வைத்தி.

நாகேஷ்
வெள்ளை வேட்டி, ஜிப்பா, முறுக்கு மீசை, கூர்மையான பார்வை - 'ரங்கன் வாத்தியார்' என்னும் அபூர்வம்..!

“மோகனா என்ன.. அந்தக் காலத்துல வடிவு ஆடின ஆட்டத்துக்கு வேற யாராவது இருந்தா ஆனைக்காலே வந்திருக்கும்” என்று பெருமையாக வைத்தி அறிமுகப்படுத்தும் போது வெட்கத்தால் வடிவாம்பாளின் முகம் சிவந்து போகும். இன்னொரு காட்சியில் ‘அந்தக் காலத்துல வடிவு ஆடி ஆடியே.. திருவையாறுல பாதி பேரை செவுடாக்கியிருக்கிறா’ என்னும் போது பாராட்டுகிற சாக்கில் கலாய்ப்பது நன்றாக தெரியும்.

சண்முகசுந்தரத்திற்கும் மோகனாவிற்கும் பிரிவை ஏற்படுத்துவதில் வைத்தியின் பங்கு ஸ்பெஷலாக இருக்கும். நாடகக் கொட்டையில் எரிச்சலாக அமர்ந்திருக்கும் சிவாஜியிடம் “ஏண்டாப்பா.. இங்கயே கதியா இருக்கே.. வாசிக்கறதுக்கு போகறதில்லையா.. விஷயம் தெரியுமோ.. சிங்கபுரம் மைனருக்கும் மோகனாவிற்கும் கல்யாணம் நடக்கப் போகுது. உன் கச்சேரியே புக் பண்றேன்.. இப்ப என்ன வாங்கறே நீ?” என்று சிவாஜி வெறுப்பேற்றி அவரிடம் உதை வாங்குவார்.

நாகேஷ்
நாகேஷ்தில்லானா மோகனாம்பாள்

சிங்கபுரம் மைனரின் லீலைகள் அவருக்கு மனைவிக்கும் மாமனாருக்கும் தெரிய வரும். “யோவ்.. வைத்தி.. இனிமே இந்தப் பக்கம் வராதே... மைனர்ன்ற வார்த்தையே இனிமே உன் வாய்ல வரக்கூடாது” என்று மாமனார் மிரட்ட, சற்று தள்ளிப் போய் “ஏன்.. மைனர்.. மேஜர் ஆயிட்டாரா?” என்று வைத்தி நக்கலாக கேட்பது அசத்தலான குறும்பு. மைனர் சென்றவுடன் வைத்திக்கு இன்னொரு குடுமி அகப்படுவார். அந்த ஊரின் மிட்டாதாருக்கும் மோகனாம்பாளின் மீது கண். அதைப் பயன்படுத்தி அலட்சியமாகப் பணத்தை வாங்கிக் கொள்ளும் வைத்தி “ஹப்பாடா.. மைனர் போனவுடனே.. பக்குன்னு இருந்தது.. மிட்டாதார் கிடைச்சவுடனே ஜில்லுன்னு ஆயிடுத்து” என்று சொல்லும் அழகே தனி.

மைனர் மற்றும் மிட்டா சென்றவுடன் வைத்திக்கு இன்னமும் பெரிய குடுமியாக அகப்பட்டு விடும். மதன்பூர் மகாராஜா. இவரைச் சந்திக்கும் போது உடல் மடங்கி அசட்டுத்தனமான ஆங்கிலத்தில் பேச முற்படும் வைத்தியைப் பார்த்து மகாராஜாவாக நடித்திருக்கும் நம்பியார் முகஞ்சுளிப்பார். அவருக்கும் மோகனாவின் மீதுள்ள ஆசையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வைத்தி “பெரிய தலைப்பாவா கிடைச்சிருக்கான்’ என்று மகிழ்வது சிரிப்பை வரவழைக்கும் காட்சி.

மகாராணியைப் பார்த்தவுடன் ‘யாரு இந்தக் குழந்தே.. அரையும் குறையுமா?’ என்று உரிமையாக விசாரிக்கும் வைத்தி, ‘யுவர் ஹைனஸ்.’ என்பதை அறிந்தவுடன் பாதியாக மடங்கி ‘இவாளை எனக்கு குழந்தைல இருந்து தெரியுமே’ என்று மிகையாக புகழ ஆரம்பித்து விடுவார். ஆனால் வைத்தி ஒரு பிராடு என்பதை மகாராணி உடனே கண்டுபிடித்து விடுவார். ஆனால் வைத்திக்கு ஒரு வெட்கமும் இல்லை. ஒரு முறை மகாராஜாவிடம் பேசும் போது உற்சாகத்தில் ‘அய்யய்யோ’ என்று உரத்த குரலில் வைத்தி அரற்ற ‘சவுண்டை இறக்கு மேன்’ என்கிற மாதிரி முகச்சுளிப்புடன் அவர் சைகை காட்ட, அதே ‘அய்யய்யோ’வை தாழ்ந்த குரலில் சொல்வார்.

சிவாஜி, பத்மனி ஆகிய இருவரிடமும் மாற்றி மாற்றி பொய் சொல்லி கச்சேரிக்கு சாமர்த்தியமாக ஒப்புக் கொள்ள வைக்கும் வைத்தி, ‘இந்த வைத்தி வாய்ல பொய் வருமா?” என்று சொல்வது அசகாயத்தனம். இப்படி எழுதிக் கொண்டே போனால் கட்டுரைக்கு முடிவு வராமல் போய் விடும். எனவே இறுதியாக ஒன்று.

‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. வைத்தி பாத்திரத்தில் அவரே நடிப்பதாக கூட ஒரு எண்ணம் அவருக்குள் இருந்தது. அப்படியாப்பட்டவர் நாகேஷை ஒருமுறை வழியில் பார்த்து “என்னப்பா.. இப்படிப் பண்ணிட்ட வைத்தி பாத்திரத்தை நல்லா பண்ணிட்டியே.. பிரமிச்சுப் போயிட்டேன்.. போ’ என்று புகழ்ந்து சாலையிலேயே நாகேஷை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்திருக்கிறார்.


இந்த நாவலையும் பாத்திரத்தையும் உருவாக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரே நடிக்கவும் எண்ணியிருக்கிறார் என்றால் அதை எப்படியெல்லாம் அணுஅணுவாக ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்? அதில் இன்னொரு நடிகர் அசத்தி விட்டார் என்று ஒரு கதாசிரியரே சொல்வது எத்தனை பெரிய பெருமை?! அப்படியொரு பெருமையை சம்பாதித்த வைத்தியையும் நாகேஷையும் மறக்கவே முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com