‘விடுதலை 3 வருமா? நான் அரசியலிலா? அடுத்த தளபதி நானா? எப்பா ஏய்..’ செய்தியாளர் சந்திப்பில் சூரி கலகல!
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையரங்கிற்கு வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கமர்ஷியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல், விடுதலை 2 படத்தில் இருக்கிறது. இயற்கையோடு ஒன்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, மக்கள் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும். இந்த படம் மக்களுக்கு வலி மிகுந்த உணர்வை கொடுக்கும்.
சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை பார்ட்-2 படத்தை பாருங்கள். விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன். இந்த படத்துக்கு மக்கள் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம். அடுத்தடுத்து கதை நாயகனாக பயணிப்பேன்.
தற்பொழுது மாமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான சூட்டிங் உள்ளது. மாலை விடுதலை இரண்டாம் பாகம் படத்தை பார்ப்பேன்” என்றார். இதற்கிடையே, சூரியை கண்டு ரசிகர்கள் சிலர் ‘அடுத்த தளபதி’ ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என கத்தினார். இதைக்கேட்டு சூரி கலகலப்பாக, “எப்பா ஏய்... அமைதியா இருங்கய்யா... உங்கள்ல ஒருத்தரா இருக்கறதே நல்லது. அதுவே போதும்” என்றார் புன்னகையுடன்.
தொடர்ந்து அவரிடம் ரசிகர்கள், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என்கிற கேட்டனர். அதற்கு அவர், “இதுவே (திரைத்துறையே) நன்றாகதான் இருக்கிறது. இதிலேயே பயணிப்போம்” என்றார். தொடர்ந்து, ‘கதை நாயகன் ஆகிவிட்டீர்கள்... மீண்டும் உங்கள் தம்பி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பீர்களா?’ என செய்தியாளரொருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு அவர், “தம்பி சிவக்கார்த்திகேயன் உடன் நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன். அதற்குரிய கதையை தம்பி சிவகார்த்திகேயன்தான் சொல்ல வேண்டும். எனக்கு எப்போதும் அவர்தான் ஹீரோ” என்றார்.