“படத்தை பலமுறை பார்த்தால் போதாது; பாடத்தையும் பலமுறை படிக்கணும்” - மாணவனுக்கு நடிகர் சூரி அறிவுரை
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூரி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றுள்ளார். கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.
கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சூரியுடன் கோவில் கடற்கரை பணியாளர்கள், பாதுகாவலர்கள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.
அப்போது கோயிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சூரியிடம் சிறுவன் ஒருவன். “நீங்கள் நடித்த டான் திரைப்படத்தை பலமுறை பர்த்துள்ளேன்” எனக் கூறினார். அதற்கு பதிலளித்த நடிகர் சூரி, “படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது. பாடத்தையும் பலமுறை படிக்க வேண்டும். தாய் தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.