"ஆதாரத்தோடு வரேன்.." ரவி மோகனுக்கு ஆர்த்தியின் தாயார் சுஜாதா பதில்!
பிரபல நடிகர் ரவி மோகன், தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து 2024ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அதனை தொடர்ந்து ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷா உடன் பொது வெளிகளுக்கு வந்தார். அப்போதிருந்து கெனிஷா மீது இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் இது போன்ற இணையவழி தாக்குதல்கள் அதிகமானது பற்றி வீடியோ வெளியிட்டார். இதனை தொடர்ந்து தான் சென்னை, தன் வேலை எல்லாவற்றையும் விட்டு போவதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த இணையவழி தாக்குதல்கள் குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரவிமோகன். அப்போது பேசுகையில், என் குழந்தைகளைப் பார்க்க விட மறுக்கிறார்கள்; என் மகனும் நானும் சேர்ந்து டிக் டிக் டிக் படம் நடிக்கும்போது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள் எனத் தெரிவித்திருந்தேன். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென ரூ.50 லட்சம் பள்ளிக்கட்டணம் செலுத்தி நான்தான் பார்த்துக்கொள்கிறேன்; குழந்தைகள் மீதான என் பாசத்தை பற்றி யாரும் பேசாதீர்கள். கெனிஷா என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் காலி செய்து அனுப்பிவிட்டார்கள். விவாகரத்து கிடைக்கும் வரையில் நடிக்கப்போவதில்லை.. என்னால் நடிக்க முடியவில்லை; எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை என உருக்கமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ள ஆர்த்தியின் தாயார் சுஜாதா நடிகர் ரவிமோகன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளார். சுஜாதா பேசுகையில், “இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கிறது. ரவி மோகனுக்கு என்ன அழுத்தம் எனத் தெரியவில்லை இன்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால், நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால், என்னால் இங்கு பேசமுடியவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து நான் பேசாததற்கு காரணம், என்னுடைய பேரனுக்கு இன்று 10-வது பொதுத்தேர்வு, ரவிமோகன் பேசியது குறித்தே அவர் மன உளைச்சலில் இருக்கிறான். அவனை நான் மேலும் மன உளைச்சலுக்குள்ளாக்க விரும்பவில்லை. அவரது மகன்களை பார்க்கவிடவில்லை என்பது பொய். அதுபோல யாரும் செய்ய முடியாது. கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் உண்மையில்லை. ரவிமோகன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரத்துடன் பதில் கூறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

