"என் குழந்தைகளை பார்க்க விடவில்லை.. படமே நடிக்க மாட்டேன்" - கண்கலங்கிய ரவி மோகன்
விவாகரத்து வழக்கில் சிக்கிய நடிகர் ரவி மோகன், இணையதள தாக்குதல்கள், கெனிஷா மீது நடந்த சைபர் புல்லிங், குழந்தைகளை பார்க்க விடாத நிலை குறித்து கண்கலங்கிப் பேசியுள்ளார். விவாகரத்து முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்த அவர், 23 வருட உழைப்பையும் குடும்ப அவமானங்களையும் நினைத்து மனவேதனையுடன் தன்னை நிம்மதியாக இருக்க விடுமாறு கோரியுள்ளார்.
பிரபல நடிகர் ரவி மோகன், தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து 2024ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அதனை தொடர்ந்து ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷா உடன் பொது வெளிகளுக்கு வந்தார். அப்போதிருந்து கெனிஷா மீது இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் இது போன்ற இணையவழி தாக்குதல்கள் அதிகமானது பற்றி வீடியோ வெளியிட்டார். இதனை தொடர்ந்து தான் சென்னை, தன் வேலை எல்லாவற்றையும் விட்டு போவதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த இணையவழி தாக்குதல்கள் குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச செய்தியாளர்களை சந்தித்தார் ரவிமோகன். அதில் "இதை என்னுடைய தனிப்பட்ட பேட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தவறு. நான் எதுவாக இருந்தாலும் பொறுத்துப்போவேன் அதுதான் என் குணம். சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது மறைமுகமாக இதை செய்யாதீர்கள், நேரடியாக என் அலுவலகத்துக்கே வாருங்கள். முதலில் நான் சொல்ல விரும்புவது என்னுடைய படங்கள் இனிமேல் வெளியாகாது, எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை. நான் நடிக்க போவதில்லை, என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. இனிமேல் என்னை சீண்டி பார்க்க நினைத்தால், நான் சாது இல்லை என சொல்லிக் கொள்கிறேன். 23 வருடங்கள் நான் வேலை செய்திருக்கிறேன். 90 சதவீத படங்கள் வெற்றியடைந்தவை. என் அப்பாவும் அண்ணனும் எனக்காக ஆரம்ப நாட்களில் மெனக்கெட்டார்கள், என் குடும்பம் தான் எனக்கு எல்லாம். அவர்களை சீண்ட நினைக்காதீர்கள்.
இந்த இரண்டு வருடங்கள் நான் அமைதியாக இருந்ததே உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக. இனி எல்லா ஆதாரங்களும் ஒன்று ஒன்றாக வெளியாகும். என்னுடைய குழந்தைகளை பார்க்க விடவில்லை. அவர்களை இத்தனை வருடம் பார்த்துக் கொண்டது நான். குழந்தைகள் மேல் அன்பு இல்லை என என்னுடைய பாசத்தை பற்றி யாரும் பேச வேண்டாம். அவர்களை பார்க்கவிடுவதில்லை, பள்ளிக்கு பாடிகார்டுடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று தான் அதிலிருந்து ஓடிவந்தேன். இருக்கும் போது பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், இல்லாத போது அமைதியாக இருக்க வேண்டும். அதைவிட்டு ஒரு குழுவுக்கு காசு கொடுத்து தேவை இல்லாத வேலைகளை செய்ய வைக்கக்கூடாது. குறிப்பாக நான் சொல்ல நினைப்பது, இணையவழி தாக்குதல் (Cyberbullying) பற்றி . கெனிஷாவை Cyberbullying செய்து என் வாழ்க்கையில் இருந்து அனுப்பிவிட்டீர்கள். அதற்காக இந்த சந்திப்பு இல்லை. அவர் எங்கிருந்தாலும் நன்றாக தான் இருப்பார். உங்களை எல்லாம் நான் சும்மா விடமாட்டேன். ஒரு மனிதனுக்கு கஷ்டம் இருக்கும் போது தான் அவனுடன் யார் இருப்பார்கள் என தெரியும். அப்படி இருந்த பெண் தான் கெனிஷா. அவர் வீடியோ போட்டால் அதில் Cyberbullying.
என் அப்பா அம்மா கையெடுத்து கும்பிட்டு சொன்னார்கள் இந்த குடும்பம் வேண்டாம் என்று. அட்சதை போடும்போது கூட நாசமா போ என்றுதான் போட்டார்கள். இன்று அது நடந்து விட்டது. ஏன் என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்கிறீர்கள், என்ன தப்பு செய்தேன் நான்? 45 வயதில் அழகு பின்னால் ஓடுகிறேனா? என்ன பேசுகிறீர்கள். எல்லாத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் பெயரில் அக்கௌன்ட் கூட கிடையாது, ஒரே ஒரு ஜாயிண்ட் அக்கௌட் தவிர. என்ன செலவு செய்தாலும், ஏன் என்ற கேள்வி வேறு. அது நான் சம்பாதித்த காசு. எனக்கு அந்த வீட்டில் சொல்ல முடியாத அளவு அநியாயம் நடந்திருக்கிறது. என் குழந்தைகளை பார்க்க விடவில்லை என்றதும் என்னை நான் துன்புறுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
இந்த மூன்றெழுத்து நடிகை என் பெயரை சொல்லாமல் என்னை பற்றி பேசி வருகிறார். மூன்று குடும்பத்து வாழ்க்கையை கெடுக்க தயாராக இருந்த அவர் என்னை பற்றி பேசுகிறார். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்னை பற்றி பேச? எனக்கு ரத்த வாந்தி வருகிறது சூனியம் வைக்கிறார்கள். அப்போதும் அதை செய்துதான் பெட்டி பாம்பாக வைத்திருந்தார்கள். அப்பா அம்மா கொடுத்த புத்திக்கு தெரிகிறது, ஆனால் அவர்கள் உருவாக்கிய குணம் அப்படி நடக்க விடவில்லை.
இப்போது நான் வெளியே போனதுதான் உங்களுக்கு தெரியும். நான் அதற்கு முன் இரண்டு வருடம் நான் ஹோட்டலில் தங்கி இருந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாது. நான்கு வருடம் எனக்கும் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கையை அறுத்துக் கொண்டு மிரட்டி தான் என்னை திருமணம் செய்து கொண்டார். வெளிய வந்து இரண்டு வருங்களாக தான் நிம்மதியாக இருந்தேன். கல்யாணம் ஆகி இருண்டு வருடங்களில் வீட்டை விட்டு பிரித்து கூட்டி வந்து, தனியாக வீடு கட்டி, யார் கொடுத்தாலும் பணம் வாங்க வைத்து அதில் மூன்று படம் தோல்வியானது. பின்னர் அவர்களே தயாரிப்பு நிறுவனம் துவங்கி ஒரு படம் முடிவதற்குள் இன்னொரு படம். ஏன் நான் வெளி தயாரிப்பில் நடிக்கக்கூடாதா? கம்பெனி ஆர்டிஸ்ட்டா நான்? நான் வாயை மூடிக் கொண்டிருந்ததால் இந்த நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இனிமேல் எதற்கு அப்படி இருக்க வேண்டும். நான் இமேஜ் பார்ப்பேன், வெளியே எதையும் பேச மாட்டேன் என நினைத்தார்கள். இமேஜ் என்றால் சமூக வலைத்தளங்களில் பேசுவது அல்ல, எனக்காக துணை நிற்கிறார்களே அவர்கள் "இவனுக்கான என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்' என சொல்வார்கள் அதுதான் என்னுடைய இமேஜ். எனக்கு ஒரு சின்ன பிரேக் கொடுங்கள். நான் திரும்ப வந்து விடுகிறேன்" என்றார்.

