\
A J Balakrishnan
A J BalakrishnanKamaraj

காமராஜ் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும்! - A J பாலகிருஷ்ணன் | Kamaraj | A J Balakrishnan

நான் காமராஜரைப் பற்றிய முழுமையான திரைப்படத்தை உருவாக்கி, அதை 2004-ல் வெளியிட்டேன். அந்தச் சூழ்நிலையும், அதற்கான வாய்ப்புகளும் இன்று எளிதாக கிடைப்பதில்லை. 
Published on

காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன்"நான் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 1994-ல் பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்களைச் சந்தித்தேன். காமராஜரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னை ஜி.கே. மூப்பனார் அவர்களிடம் அழைத்துச் சென்றார். இந்த திரைப்படம் உருவாக தேவையான அனைத்து உதவிகளையும் மூப்பனார் அவர்கள் செய்தார். ஆனால் அவர் மறைந்ததால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. 

பின்னர் ஜி.கே. வாசன் அவர்களைச் சந்தித்தேன். ‘அப்பா தொடங்கி வைத்த பணியை முடிக்க வேண்டும்’ என்று கூறி, இந்தப் படத்தை நிறைவு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் அவர் வழங்கினார். இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட படத்தை உருவாக்குவது மிகவும் கடினம். நான் காமராஜரைப் பற்றிய முழுமையான திரைப்படத்தை உருவாக்கி, அதை 2004-ல் வெளியிட்டேன். அந்தச் சூழ்நிலையும், அதற்கான வாய்ப்புகளும் இன்று எளிதாக கிடைப்பதில்லை. அதன் பிறகு மகாத்மா காந்தி பற்றியும், திருக்குறள் பற்றியும் திரைப்படத்தை உருவாக்கினேன். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கும், நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடுவதற்கும் காரணம் காமராஜர்தான் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் காமராஜரின் சிந்தனைகளே அடிப்படையாக உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகுவதற்கும் அவரது ஆட்சிமுறையும், மக்கள் நலப் பணிகளும் முக்கிய காரணமாக இருந்துள்ளன. அவரது ஆட்சியின் சிறப்புகள் மக்களின் நினைவிலும், பத்திரிகைகளின் பதிவுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

A J Balakrishnan
72வது தேசிய திரைப்பட விருது முழுப்பட்டியல் | Amaran | Maharaja | Captain Miller

காமராஜர் படத்திற்கான பணிகள் என் 30-வது வயதிலேயே தொடங்கின. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் படத்துடன் தொடர்புடைய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். காமராஜ் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும். அந்தப் படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமைகள் உள்ளிட்ட பல உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை. தற்போது அது யூடியூபில் மட்டுமே உள்ளது. எனவே அந்தப் படத்தை அரசு வாங்கி, அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். ‘ஒரு தனிநபர் அரசிடம் இப்படிக் கோரிக்கை வைக்கலாமா?’ என்ற கேள்வி எனக்கே எழுந்தது. ஆனால் இந்த நாட்டுக்காக வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கையை பதிவு செய்வதற்காக என் வாழ்க்கையின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தக் கோரிக்கையை வைக்கும் தகுதி எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். காமராஜருக்கு மக்கள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனின் ஒரு பகுதியாக இந்த திரைப்படம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com