சூர்யா படத்தை கடுமையாக விமர்சித்த மிஸ்கின்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இயக்குநர் மிஸ்கின், சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை 'மொக்கை' என விமர்சித்தது, சூர்யா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தின் வெற்றிவிழாவில் நடந்த இந்த கருத்து பரபரப்பை உருவாக்கியது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி வெளியான டோரதி திரைப்படம், ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசுகிறது. முடிவில் தனக்கும் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது. இப்படத்திற்கு ஒரு தரப்பு மிகப்பெரிய பாராட்டையும், மற்றொரு தரப்பு விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர்.
இந்தசூழலில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் படத்தில் நடித்த அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மிஸ்கின் மற்றும் வசந்த பாலன் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மிஸ்கின், சூர்யா-கார்த்திக் சுப்புராஜ்-சூர்யா கூட்டணியில் வெளிவந்த ரெட்ரோ திரைப்படத்தை மொக்கை என பேசியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேடையில் பேசிய மிஸ்கின், “கார்த்திக் சுப்புராஜ் இதற்கு முன் ஒரு படம் பண்ணினான், அது மொக்க படம் தான். நான் அந்த படத்தை பார்த்தேன். என்னென்னமோ நடக்குது, ரொம்ப மொக்கையா இருந்தது. உண்மையில், இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதுதான் நான் கார்த்தியின் இயக்கத்தில் பார்த்த முதல் திரைப்படம். அதுக்கப்புறம் என் அஸிஸ்ட்டண்ட்ஸ் லாம் சொல்லுவாங்க கார்த்தி நல்லா பண்ணுவான்னு, இல்ல வேணாம்டானு சொல்லிட்டன். நான் திரைக்கு பொழுதுபோக்குறதுக்காக போக மாட்டன் ‘சாமிகளை கும்பிட தான் போவன்’னு சொன்னன், இந்த படத்தில் அந்த சாமிகளை கும்பிட்டன்” என பேசியிருந்தார்.
இந்தசூழலில் கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த ரெட்ரோ திரைப்படம் என்பதால், ரெட்ரோ திரைப்படத்தை மொக்க திரைப்படம் என கூறியது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

