சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் பிக் அப்டேட்.. முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தின் டைட்டில் வெளியீடு!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உச்சம்பெற்றுவரும் சிவகார்த்திகேயன், ’அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 300கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய தமிழ் ஹீரோக்கள் பட்டியலில் தன்னை இணைத்துகொண்டார்.
கிட்டத்தட்ட 350 கோடி வசூல் என்ற மிகப்பெரிய வெற்றி படத்திற்கு பிறகு, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 என்ற திரைப்படத்திலும், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ’பராசக்தி’ என்ற படத்திலும் அடுத்தடுத்து நடித்துவருகிறார்.
ரஜினி, விஜய், கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு பிறகு வசூலில் சாதனை நிகழ்த்தியிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்த பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என சொல்லப்படும் நிலையில், அடுத்தடுத்த திரைப்படங்களின் தேர்வை பார்த்து பார்த்து தேர்வுசெய்துவருகிறார் சிவகார்த்திகேயன். அந்தவகையில் இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என பெயரெடுத்துள்ள ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எந்த கதையில் நடித்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலான SK23 படத்தின் டைட்டில் நாளை ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியிடப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் வெளியீடு..
நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியிடப்படும் என இயக்குநர் முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “அவரின் வருகை ஒரு பொருளை மட்டும் தான் குறிக்கும், பேரழிவு” என பதிவிட்டு, நாளை காலை 11 மணிக்கு டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் இருக்கும் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் பின்பக்கமாக திரும்பியிருக்கும் நிலையில், சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரை பொறுத்தவரையில் படம் முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் SK23 திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.
எதிர்நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன், பராசக்தி என பழைய திரைப்படங்களின் பெயரை தன் படங்களுக்கு வைத்துவரும் சிவகார்த்திகேயன், SK23 படத்திற்கும் ’சிகரம்’ என பெயரை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.