அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு ‘இதயம் முரளி’ என தலைப்பு! 4வது படமாக தயாரிக்கும் டான் பிக்சர்ஸ்!
1991-ம் ஆண்டு நடிகர் முரளியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘இதயம்’. கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞனின் சொல்லப்படாத ஒருதலை காதலை மையமாக கொண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் முரளியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போதும் காதல் மற்றும் ஒருதலை காதல் என்றால் ’பெரிய இதயம் முரளி’ என நண்பர்களுக்குள் கிண்டலடிக்கும் விதமாக இதயம் படத்தின் கதாபாத்திரம் பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தன்னுடைய தந்தையின் ஹிட்டடித்த படத்தின் பெயரிலேயே ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் அதர்வா. ஒருதலைக் காதலாக உருவாகவிருக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
’இதயம் முரளி’ என தலைப்பு..
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் இட்லிகடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் சிம்புவின் STR49 திரைப்படங்களை தொடர்ந்து 4வது திரைப்படமாக ’இதயம் முரளி’ என்ற திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கவிருக்கும் இப்படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவிருக்கிறார், இப்படத்தில் ஒருபகுதியாக தமனும் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘இதயம் முரளி the one side’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான முதல் புகைப்படம் மற்றும் டைட்டில் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.