3 தேசிய விருதுகள் வென்ற ’அமரன்’ படம்.. வாழ்த்துகளை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்–சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ ராணுவ வீரரின் வாழ்க்கை, பொருளாதார சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகளை உணர்வுபூர்வமாகச் சித்தரித்து ரசிகர்களை கவர்ந்தது. 72வது தேசிய விருதில் 3 பிரிவுகளில் கௌரவிக்கப்பட்ட இந்தப் படத்திற்கும், மற்ற தமிழ்ப் படங்களான ‘ராயன்’ உள்ளிட்ட வெற்றியாளர்களுக்கும் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டு வெளியானது.
ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எப்படியானது, மேஜர் பதவியில் இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலை என்ன?, அவர்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட புதிய பார்வையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதை வென்றிருந்தன.
100 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிய இத்திரைப்படம் வசூலிலும் 300 கோடிக்கு மேல் வசூல்வேட்டை நடத்தியது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகெப்பெரிய வெற்றியை பெற்ற இத்திரைப்படத்திற்கு தற்போது 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ’ராயன்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த அமரன் திரைப்படத்திற்கு, சிறந்த படத்தொகுப்பு (கலைவண்ணன்) மற்றும் சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த இயக்குநருக்கான (ராஜ்குமார் பெரியசாமி) விருதுகள் மொத்தம் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் அமரன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட 3 தேசிய விருதுகளுக்காக படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “அமரன் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருக்கும் பெருமைக்குரிய நாள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்திரையுலகில் தேசிய விருது வென்ற மற்றவர்களுக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்து கூறியுள்ளார்.

