இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த 'காதல் கதை'.. ரூ.500 கோடியை அள்ளிய ’சையாரா’!
பாலிவுட்டில் புதுமுக நடிகர்களை வைத்து வெளியான சையாரா திரைப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பத்தா உள்ளிட்டோர் நடித்து வெளியான சையாரா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
முழுக்க முழுக்க ஜென் சி தலைமுறையை கவர்ந்திழுத்த இத்திரைப்படம் வெளியான மூன்று வாரங்களில் 500 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
500 கோடிகளை அள்ளிய ’சையாரா’
ரொமாண்டிக் மியூசிகல் படங்களுக்கு பெயர் போன பாலிவுட் இயக்குநரான மோஹித் சூரி, 2013-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான `Aashiqui 2' படத்தை இயக்கியவர். அப்படம் இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்துவரும் சூழலில், அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் ஹிட்டடிக்கவில்லை.
இந்த சூழலில் 3 வருடம் இடைவெளிக்கு பிறகு புதிய முகங்களான அஹான் பாண்டே, அனீத் பட்டா இருவரையும் வைத்து மோஹித் சூரி உருவாக்கியிருக்கும் படம் தான் ‘சையாரா’. மீண்டும் ஒரு அற்புதமான காதல்கதை திரைப்படத்தை கையில் எடுத்திருக்கும் இயகுநர், ஜென் சி தலைமுறைகளை கட்டிப்போடும் வகையில் ஒரு திரைக்காவியத்தை உருவாக்கியுள்ளார்.
எப்படி பெரிதும் அறிமுகமில்லாத நடிகர்களை கொண்டு `Aashiqui 2' படத்தை ஹிட்டாக்கினோரோ, அதே மேஜிக்கை தற்போது சையாராவிலும் செய்துள்ளார் இயக்குநர். இப்படம் வெளியான முதல்நாளிலேயே இந்தியாவில் 20 கோடியை அள்ளியது. புதுமுகங்கள் நடித்து வெளியான ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதன் முறை.
இந்நிலையில் படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ‘சையாரா’ 507 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்திய சினிமாவில் ஒரு காதல்கதை திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது என்ற சாதனையை படைத்துள்ளது ’சையாரா’.