”'மோனிகா' பாடல் உருவாக காரணமே சௌபின் தான்..” லோகேஷ் சொன்ன ஸ்பெஷல் காரணம்!
தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து ’விக்ரம்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, ரஜினியை வைத்து ’கூலி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஒரு தீவிரமான கமல் ரசிகர் ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பே படத்திற்கு ஹைப் ஏற்றி உள்ளது.
ஒரு பக்கம் ரஜினி, லோகேஷ் என்றால் மறுபக்கம் இசையில் தரமான சம்பவங்களை செய்திருக்கிறார் அனிருத். முதலில் டிஆர் வைபில் சிக்கிட்டு பாடலை களமிறக்கி முனுமுனுக்க வைத்த அனிருத், ’மோனிகா’ என்ற பாடல் மூலம் இணையத்தையே கட்டிப்போட்டுள்ளார். மோனிகா பாடல் வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் டிரெண்டிங்கில் கலக்கிவருகிறது.
பாடலில் ரஜினி இல்லையென்றாலும் நடனத்தில் மிரட்டிய பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிர் இருவரும் ரீல்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் கூலி திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் இறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், மோனிகா பாடல் குறித்த சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துள்ளார்.
மோனிகா பாடல் உருவாக காரணமே சௌபின் தான்..
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகியிருக்கும் ’கூலி’ திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் வரும் ஆகஸ்டு 14-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் படம் சார்ந்து நேர்காணல்களில் பங்கேற்றுவருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் ரஜினி இல்லாம மோனிகா பாடலை இறங்கிட்டிங்களே என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், “மோனிகா பாடல் வணிக நோக்கத்திற்காக மட்டுமே வைக்கப்பட்டது. என் படங்களில் பொதுவாக ஐட்டம் பாடல்கள் இருக்காது. அது ஒரு சார்மிங் பாடலாக இருக்கவேண்டும் என்று தான் மோனிகா பாடலை வைத்துள்ளோம், இது படத்தின் கதையை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாது. ஜெயிலரில் ரஜினிகாந்த் சாருக்கு நடனமாட வாய்ப்பு இருந்தது, ஆனால் கூலியில் அப்படி எதுவும் இல்லை, அதனால் தான் ரஜினி சார் இடம்பெறவில்லை.
ஆனால் மோனிகா பாடல் உருவாக காரணமே சௌபின் தான். அவருடைய டான்ஸை நான் பீஷ்ம பர்வம் படத்தில் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலில் இன்னும் வசீகரிப்பவர் சௌபின் தான். ஏனென்றால் இது மிகவும் புதியது. ஒரு ஹீரோவும் ஹீரோயினும் நடனமாடுவது புதிதல்ல. ஆனால் எந்தப் படத்திலும் நடனமாட விரும்பாத வில்லனுக்கு நடனமாடத் தெரிந்தால் எப்படி இருக்கும்? 'பீஷ்ம பர்வம்' படத்தைப் பார்க்கும்போது இதை உணர்ந்தேன். சௌபினுக்கு இவ்வளவு நன்றாக நடனமாடத் தெரிந்தால், நான் ஏன் அவரை நடனமாடச் சொல்லக்கூடாது? என்று தோன்றியது. அப்படிதான் மோனிகா பாடல் உருவானது" என்று லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.