“நீ எல்லாம் சினிமாவுல என்ன பண்றணு கேட்டாங்க..” வெறுப்பவர்கள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களிடையே அதிகப்படியான பாராட்டை பெற்றது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ.333 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
இந்நிலையில், தன்னுடைய அடுத்தபடமாக இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், ஆரம்பகாலத்தின் போது தன்னுடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
என் முகத்திற்கு நேராக கேட்டார்கள்..
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், சினிமாவில் தன்னுடைய ஆரம்பகாலத்தின் போது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் எப்படி எல்லாம் பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையாக பேசினார்.
அப்போது பேசிய அவர், ”இந்த சினிமாத்துறையில் சில மனிதர்கள் மட்டுமே ஒரு சாதாரண மனிதன் வெளியிலிருந்து வந்து நல்ல முன்னேற்றமடைவதை விரும்புகிறார்கள், ஆனால் நிறைய பேர் வெளிநபர் ஒருவர் வந்து சினிமாத்துறையில் முன்னேறுவதை விரும்புவதில்லை. இவன் என்ன இங்க பன்றான், இவனுக்கு ஏன் இதெல்லாம் கிடைக்குது என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.
சிலபேர் என் முகத்திற்கு நேராகவே ‘ நீ இங்க என்ன பண்ற, உனக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்’ என நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள். இதை நான் பல நேரங்களில் எதிர்கொண்டுள்ளேன், சிரித்துவிட்டு எதுவும் சொல்லாமல் கடந்துவிடுவேன். நீங்க சொல்றத சொல்லிட்டு போங்கனு, எதுவும் பேசாமல் எனக்கான வேளைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
அவர்களுக்கு பதிலளிக்கவோ, பதிலடி கொடுக்கவோ விரும்பவில்லை. என்னுடைய முன்னேற்றம் கூட அவர்களுக்கான பதிலடி கிடையாது, இது என்னுடைய ஏற்ற இறக்கத்தின் போதும் என்னை நேசிக்கின்ற என் ரசிகர்களுக்காகவும், நீங்க தான் என் இன்ஸ்பிரேஷ்ன்னு சொல்ற சினிமா கனவோட இருக்க சாதாரண பின்புலம் கொண்டவர்களுக்கும், என்னுடைய வளர்ச்சியை விரும்புபவர்களுக்குமானது மட்டுமே” என்று பேசினார்.